Friday, September 2, 2016

நாலடியார் - ஈகை

   
      1   இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
     உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
     கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
     அடையாவாம் ஆண்டைக் கதவு.
 
 தமக்குப் பொருள் இல்லாத காலத்திலும்ää பொருள் இருந்த காலத்தைப் போலவே மிகவும் மகிழ்ந்து பிறருக்குக் கொடுக்கும்  நற்குணமுள்ள மக்களுக்கு மேலுலகக் கதவுகள் மூடப்படாது.
   
2.முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
     பின்னரும் பீடழிக்கும் நோயுள; - கொன்னே
     பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
     கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.
   
  நம் முன் இறக்கும் நாளும், முதுமைப் பருவமும், உடல் வலிமையைக் கெடுக்கும் பிணிகளும் உள்ளன. ஆதலால் கையில் பொருள் உள்ள காலத்திலேயே மேலும் மேலும் பொருள் தேடி ஓடாமல், இருக்கும் பொருளை தேவைப்படுவோர்க்குப் பகிர்ந்தளித்து வாழ வேண்டும்.

  3. நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
     கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
     இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
     விடுக்கும் வினையுலந்தக் கால்.
 
  செல்வம் சேரும் காலத்தில் மென்மேலும் சேரும். நல்வினை முடிந்துவிட்டால் அச்செல்வத்தை இறுகப் பிடித்தாலும் அது நீங்கிப் போகும். இவ்வுண்மைகளை அறியாதவர் பிறருக்குப் பொருள் கொடுத்து உதவமாட்டார்கள். சேர்த்த செல்வத்தைப் பிறருக்கு மகிழ்வோடு கொடுத்து  உதவவேண்டும்.

  4.  இம்மி யரிசித் துணையானும் வைகலும்
     நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக் 
     கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
     அடாஅ அடுப்பி னவர்.

     நாள்தோறும் அரிசியின் உமி அளவாவது நம்மால் கொடுக்கக் கூடிய பொருட்களை இரவலர்க்குக் கொடுத்து உண்ண வேண்டும். இல்லையேல் கடல் சூழ்ந்த இவ்வுலகில், இரவலர் நம்மைப் ‘பிறர்க்கு உதவாதவர்கள்’ என்று இகழ்வர்.

   5.மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
     உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்
     ஈதல் இசையா தெனினும் இரவாமை
     ஈதல் இரட்டி யுறும்.

    மறுமை, இம்மை நிலைகளைக் கருதயேனும் இயன்றவரை பொருள்களைக் கொடுக்க வேண்டும். வறுமையால் கொடுக்க இயலாவிட்டாலும், பிறரிடம் சென்று இரவாமலிருப்பது  பிறருக்குக் கொடுத்தலைக் காட்டிலும் இருமடங்கு சிறப்பானது.

     6.நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
     படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
     குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
     இடுகாட்டுள் ஏற்றைப் பனை.
   
    பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்து வாழும் வள்ளல்கள் ஊர் நடுவில் மேடையோடு இருக்கும் வளமான பெண் பனைக்கு ஒப்பாவர். செல்வம் இருந்தும் பிறருக்குக் கொடுத்துதவாத மக்கள் சுடுகாட்டில் இருக்கும் ஆண் பனைக்கு ஒப்பாவர்.

   7.பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
     செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
     புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
     என்னை உலகுய்யு மாறு.

    கயல்மீனின் நாற்றத்தையும் புன்னைமலரின் மணத்தையும் குளிர்ந்த கடற்கரையையும் உடைய தலைவனே, மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாவிட்டாலும், உயர்ந்தோர் பிறருக்குச் செய்யும் உதவிகளைச் செய்யவிட்டாலும்,  உலக உயிர்கள் எவ்வாறு பிழைக்கும்.

   8.ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்
     ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின்
     மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்     
     பொலிகடன் என்னும் பெயர்த்து.

     வளம் மிகுந்த கடற்கரையை உடைய தலைவனே, இரப்பவர்க்கு இல்லையென்று சொல்லாமல் ஈவது ஆண்மகனின் கடமை. கைம்மாறு செய்ய இயன்றவர்க்கு உதவுவது கடன் கொடுப்பதற்கு ஒப்பாகும்.

     9.இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
     அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின்
     ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
     பைய நிறைத்து விடும்.

     நம்மிடம் இருப்பது மிகவும் சிறிது என்று கருதாமலும், இல்லை என்று மறுத்து விடாமலும் எப்போதும் அறத்தைச் செய்ய வேண்டும். வாயில்கள் தோறும் இரக்கும் தவசியின் உண்கலம் போல புண்ணியம் மெல்ல மெல்ல அறப்பயனை நிறைவாக்கிவிடும்.

   10.கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
     இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
     அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
     கொடுத்தார் எனப்படுஞ் சொல்.

    குறுங்கோலால் ஒலிக்கப்படும் முரசினது ஒலியை காத     தூரம் உள்ளோரும் கேட்க இயலும். மேகத்தின் இடியோசையை  ஒரு யோசனை தொலைவில் உள்ளோரும் கேட்க இயலும். தக்காரால் செய்யப்பட்ட உதவி பற்றிய புகழுரை, மூன்று உலகங்களில் உள்ளார் அனைவரும் அறிவர்.     

1 comment: