Friday, March 31, 2017

மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்முன்னுரை 

                பிள்ளைக்கவி’,‘பிள்ளைப்பாட்டு எனவும் பிள்ளைத்தமிழ் சுட்டப்படும். மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழைப் பாடியவர் குமரகுருபரர். பிள்ளைத்தமிழில் அம்புலிப்பருவம் சிறப்பான ஒன்று. அம்புலி என்பது நிலவு. நிலவினைப் பாட்டுடைத் தலைவனோடு அல்லது தலைவியோடு விளையாட வருமாறு அழைத்துப் பாடுவதே அம்புலிப் பருவம். அப்படி அழைக்கும் போது சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வகையான வழிமுறைகளைப் பயன்படுத்தி அழைத்துப்பாட வேண்டும். மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் அம்புலிப் பருவ பாடல்கள் இந்த வழிமுறையிலேயே அமைந்துள்ளன.

சாமம்

       சாமம் என்பதற்கு சமம் என்று பொருள். கற்கண்டு போல மழலை பேசக்கூடிய குழந்தை மீனாட்சி. மீனாட்சியம்மை ஒரு கலாநிதியாவாள். அம்புலியும் ஒரு கலாநிதி. மீனாட்சியம்மை பாண்டியன் மகள். பாண்டியர்கள் சந்திர குலத்தவர்கள். அந்த சந்திரன்தான் அம்புலி. பாற்கடலைக் கடைந்தபோது அமுது, இலக்குமி, சந்திரன் ஆகிய மூவரும் தோன்றியதாகப் புராணம் கூறும். இலக்குமி மீனாட்சியின் தோழி. தோழி பிறந்த இடத்தில் உடன் பிறந்தவன் சந்திரன். இத்தகைய பொருத்தங்களாலே இவள் உன்னை விளையாட அழைக்கிறாள் என்று சமம் என்பதற்குக் காரணம் காட்டியது நடமாக உள்ளது. 

                   வளர்சடை முடிக்கெந்தை தண்ணணறுங் கண்ணியா                                                          வைத்தது கடைபிடித்தோ

தானம் 

       தானம் என்பது அன்பளிப்பு, நன்கொடை என்று பொருள்படும். அம்புலியே! நீ விண்ணில் யாவரும் காணும்படி இரவில் திரிந்தால் உனது பகைவனான இராகு என்னும் பாம்பால் நீ விழுங்கப்பட்டு விக்கவும் கக்கவும்பட்டு அழிவாய். இரவில் வராமல் பகலில் நீ வானில் திரியலாம் என்றாலோ சூரியனின் ஒளிமுன்னே நீ ஒளிமங்கிக் காணாமல் போய் விடுவாய். எம் இறைவனான சிவபெருமானின் தலையிலேயே தங்கி விடலாம் என்று நீ நினைத்தால்> அவன் கழுத்தில் இருக்கும் நாகம் நம் கழுத்தைச் சுற்றிக் கொன்றுவிடுமோ என்று எந்நேரமும் அச்சப்பட்டுத் தூக்கமின்றி நீ நிம்மதி இழக்க நேரிடும். மேலும் சிவன் தலையிலிருக்கும் கங்காதேவியின் காலடிகளால் மிதிக்கப்பட்டு நீ அழியவும் நேரலாம். எங்கள் கோமாட்டி மீனாட்சியம்மையிடம் நீ தஞ்சம் புகுந்தாயானால் இந்த அண்டவெளி உட்பட அண்டபகிரண்டமும் தானமாகப் பெற்று இன்பமாக வாழலாம். எனவே இவளுடன் ஆட வா என்பது தான உபாயம். 

                                  வளர்சடைக் காட்டெந்தை வைத்திடப் பெறுதியேல்
                                    மாசுணம் சுற்ற அச்சம்
பேதம் 

       பேதம் என்பதற்கு வேறுபாடு என்பது பொருள். ஏ அம்புலியே! தெளிந்த அமுதமும் வெள்ளை அருவியும் போன்ற நிலவொளி வீசும் சந்திரகுலத் தோன்றலான பாண்டியர் தம் குலக்கொடி இவள். இத்தகைய பாண்டியரின் குலக்கொழுந்தைக் கண்டு இருவிழிகளும் மனமும் களிப்பில் திளைக்க நீ இவளோடு பேசி விளையாடாமல்> வெறுமனே நின்று உண்பதற்கு அமுதமும் கிடைக்காமல், உன் கலை என்னும் ஆடைகளை இழந்து தேய் பிறையாகிக் கடைசியில் காணாமலே போய் விடுகிறாய்! அதுமட்டுமா? உன் கலங்கத்தைச் சொல்லட்டுமா? மகளிர் சந்திர கிரகணத்தன்று மண்கலயத்தில் உனக்காகப் பொங்கி வைக்கும் புதுச் சோற்றுக்கு நீ பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் தானே! அதுமட்டுமா? வானத்தில் உன்னோடு ஒத்தவனான கேது உன்னை விழுங்கித் துப்ப, அந்த எச்சிலை வாரி உண்டு ஓடுகிற கேவலமானவன் அல்லவா நீ! இவள் அழைக்க வராமல் என்ன தவறு செய்துவிட்டாய்! வீம்பு பிடிக்காமல் இந்த மாணிக்கவல்லியுடன் ஆட வந்துவிடு! என்று அழைப்பதாக இந்தப் பேத வழிமுறைப் பாடல் அமைந்துள்ளது.

தண்டம் 

       தண்டம் என்றால் தண்டனை என்று பொருளாகும். ஏ அம்புலீ! மழைமேகம் போன்ற கருமை நிறமான கூந்தலையுடைய மீனாட்சியம்மை உன்னை வா என அழைத்தும் நீ உடனே வரவில்லை. அதனால் அவள் கோபப்பட்டாள். நாங்கள் சில பொய்களைச் சொல்லி உன்னைக் காப்பாற்றியிருக்கிறோம். என்ன சொன்னோம் தெரியுமா? அம்மையே! உன் அழகான முகத்தின்முன் சந்திரன் வந்தால் அவன் அழகாக இல்லை என்று பிறர் கேலி செய்வார்களே என்று வெட்கப்படுகிறான் என்றோம். மேலும், தான் வெளியே வந்தால் இராகு. கேது என்னும் பாம்புகள் தோளைப் பற்றிக் கொன்றுவிடும் என்று சந்திரன் அஞ்சிக் காலம் தாழ்த்துகிறான் போலும் அம்மையே என்றெல்லாம் உனக்காகப் பொய்யுரைத்து உன்னை ஒருவாறு காப்பாற்றியுள்ளோம். இதற்கும் மேல் நீ வரத் தவறினால் இவள் கோபமுறுவாள். பிறகு நீ தப்பிப் பிழைப்பது முடியாது! தெரிந்துகொள்! இவள் தன் கொடிபோன்ற ஆடைகளையும் நெற்றியையும் திருத்தித் தன் வேர்வைகளைத் துடைத்து ஒப்பனை செய்து கொண்டிருக்கிறாள். இதுதான் நல்ல சமயம். நீ ஓடோடி வந்துவிடு. பெரிய கோட்டைகளையுடைய மதுரை நகர்க்காரியான இவளுடன் நீ விளையாட வந்துவிடு! என்ற அழைப்பதாகத் தண்டம் உபாயம் அமைந்துள்ளது.

                                அழைக்கும் தடம்புரிசை மதுரைத் துறைப்பெணுடன்
                                 அம்புலி! ஆடவாவே!
முடிவுரை 

       மீனாட்சியம்மையோடு சாம, தான, பேத, தண்டம் எனும் நான்கு வழிமுறைகளில் அம்புலியை விளையாட அழைப்பதாக மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் அம்புலிப் பருவ பாடல் அமைந்துள்ளது.