Monday, September 26, 2016

தெரு ஓவியன் -யுகபாரதி


                                                   தெரு ஓவியன் -யுகபாரதி
     
    யுகபாரதியின்  ''தெரு  ஓவியன் " என்னும் கவிதைக்கு  முதலாம் ஆண்டு  கணிதவியல்  மாணவி செல்வி. வர்ஷாவின் ஓவிய வடிவம்.  
     கை  தேர்ந்த ஓவியன் ஒருவன்  தன்  கலைத் திறமையை  வெளிப்படுத்த தெருவைத்  தேர்ந்தெடுத்து, அதில்  பல  தலைவர்களை ஓவியம் வரைந்து , அங்கு விழும்  காசுகளைக்  கொண்டு  வாழும் அவல நிலையை        யுகபாரதியின்  ''தெரு  ஓவியன் "  விளக்குகிறது.
    இங்கு தெரு ஓவியனை ஓவியக்   காட்சிப்படுத்தியுள்ளார் வர்ஷா. அவருக்குப் பாராட்டுக்கள் .

தமிழ்: அழகின் சிரிப்பு - அழகு

தமிழ்: அழகின் சிரிப்பு - அழகு: காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் !           கடற்பரப்பில் , ஒளிப்புனலில் கண்டேன் ! அந்தச் சோலையிலே , மலர்களிலே , தளிர்கள் தம்...

Saturday, September 3, 2016

அழகின் சிரிப்பு - அழகு


காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!
          கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
          தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
          மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்! ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
          தனில்அந்தஅழகென்பாள் கவிதை தந்தாள்.
            அதிகாலைப் பொழுதில் உதித்தெழும் சூரியனின் காட்சி மிகவும் அழகானது. அக்காட்சியானது கடலின் மீது விழும் சூரிய ஒளியின் பிரகாசத்தினை கடலும் சேர்ந்து வாங்கிப் பொன் மஞ்சள் நிறமாக ஒளிருகின்ற காட்சி மிகவும் தனித்த அழகுடையது ஆகும். பூஞ்செடிகளின் கூட்டம் அணிவகுக்கும் சோலைகளிலும், அங்கு மலர்ந்து மணம் வீசும் மலர்களிலும், பசுமையான தளிர்களிலும், இப்படிப் பார்க்கும் இடங்களில் எல்லாம் அந்த அழகு என்கிற பெண் நம் கண்களில் தெரிந்தாள். அவ்வாறே மாலை நேரத்தில் சூரியன் மறையும் காட்சி ஒரு பெரிய மாணிக்கக் கட்டியினை வெட்டி எடுத்து கீழ்வானில் ஒட்டிவைத்ததனைப் போன்று ஒளிவீசுகின்ற அழகாக அந்த அழகுப்பெண் இருந்தாள்.  சாலையோரங்களில் நிறைந்திருந்த ஆலமரங்களின் கிளைகளில் எல்லாம் கிளிகளின் கூட்டம் அமர்ந்திருந்த காட்சி மிகவும் அழகிய பெண்ணாகி என் உணர்வுகளைத் தூண்டி இந்தக் கவிதையினைத் தந்தாள்.

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
          திருவிளக்கில் சிரிக்கிறாள்; நாரெ டுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவில்
          நாடகத்தைச் செய்கின்றாள். அடடே செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
          புதுநடையில் பூரித்தான்; விளைந்த நன்செய்
நிலத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
          நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.
சின்னஞ்சிறு குழந்தைகளிடத்தில் எந்தவிதமான பொய்மைகளும் இருக்காது. குழந்தையின் சிரிக்கும் விழிகளில் நம்மைக் கவரும் அழகு உள்ளது. ஏற்றிவைக்கப்பட்ட குத்துவிளக்கு சிரித்தபடியே எல்லோரையும் கவரும் அழகுடையது. மலர் தொடுக்க நாரினை எடுத்து வளைத்து வளைத்து பூத்தொடுக்கும் காலத்தில் அந்த விரலசைவில் ஓர் அழகிய நாடகம் நம்மைக் கவர்கின்றது. அடடே இவை மட்டுமின்றி அங்கே ஓர் உழவன் தன் தோள்கள் சிவக்கும் படியாகக் கலப்பையைச் சுமந்தபடி நடந்த செல்லும் போதினில் தெரிகிற உற்சாகத்துடனான புதுநடையில் தெரிந்த அழகு அனைவரும் மகிழும் படியாக உள்ளது. நிறுத்திய நம்விழிகளை அடுத்து நகர்த்த முடியாத அளவிற்கு நம்மைக் கட்டிப்போடும் அழகுடன் விளைந்து நின்று அறுவடைக்குத் தயாரான வயல்களில் உள்ள அழகுப்பெண் என் நெஞ்சில் குடி வந்து நின்று, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினைத் தந்தாள்.
திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச்
          செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன், யாண்டும்
அசைவனவும் நின்றனவும் கண்டேன், மற்றும்
          அழகுதனைக் கண்டேன் நல் லின்பங் கண்டேன்.
பசையுள்ள பொருளிலெலாம் பசையவள் காண்!
          பழமையினால் சாகாத இளையவள் காண்!
நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
          நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.
            எல்லாத் திசைகளினையும், வானினையும் இவ்வுலகில் உள்ள பொருள்கள் யாவற்றையும் நான் கண்டேன். மேலும் அசையும் பொருட்களையும் அசையாப் பொருட்களையும் கண்டேன். மீண்டும் மீண்டும் இவை எல்லாவற்றிலும் அழகு உள்ளதனைக் கண்டு இன்பம் கொண்டேன். நம்மைக் கவர்ந்திருக்கின்ற தன்மையுடன் மனதில் ஒட்டி நின்று என்றும் விலகாத பசைபோன்று எல்லாப் பொருள்களிலும் அழகு நின்று நம் நெஞ்சில் ஒட்டிக் கொண்டு இன்பம் தருகின்றது. இந்த உலகம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் இன்னும் இந்த இயற்கைப் பெண் தன் அழகு நலன் குன்றி அழிந்து போகாமல் என்றும் இளமையோடு இருக்கின்ற அழகினையும் நான் கண்டேன்.
அழகினை ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாம் எங்கு பார்த்தாலும் அழகு என்கிற பெண் இருக்கின்றாள். நல்ல அழகினை மட்டும் நாம் விரும்பினோம் என்றால் எத்தகைய துன்பமும் நேராது. இங்கே நல்லழகு என்றும் மேலே நல்லின்பம் என்றும் ஆசிரியர் ஏன் குறிப்பிடுகின்றார்? ‘ அழகை ரசித்தல் என்ற நோக்கோடு உடல் அழகை ரசிக்கக் கூடாது. குறிப்பாக பெண்ணழகு; அப்படி நாம் வரையறைக்குட்பட்ட இயற்கையையும் செயற்கையையும் மட்டும் கண்டு மகிழும் போது ஏற்படும் இன்பம் நம் மனதிற்கும் உடலிற்கும் நன்மை பயக்கும் என்பதனால் நல்லின்பம்என்றார் ஆசிரியர்.