Friday, September 2, 2016

பிரபஞ்ச ரகசியம்


கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் ‘பிரபஞ்ச ரகசியம்’ என்னும் கவிதையின் மூலமாக வாழ்க்கையின் தத்துவத்தை உணர்;த்துகின்றார். உள்ளதை உள்ளபடி காட்டும் சிறப்பு கண்ணாடிக்கு உண்டு. அக்கண்ணாடி விசயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை ஓர் எச்சரிக்கையாகவே இக்கவிதையில் விட்டுச்செல்கிறார். அதாவது உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஏதோ ஒரு முகம் பார்த்துக்கொண்டிருக்கின்றது என்பதை உணர வேண்டும். கண்ணாடியில் முகம் பார்க்கும்பொழுது அந்தந்த வயதிற்கான பிம்பத்தை அது பிரதிபலிக்கும். ஆட்கள் மாறிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அந்த பிம்பங்கள் மறைவதில்லை. அதுபோலவே நாம் வாழ்க்கையில் செய்த வினைகளும் ஒவ்வொரு பிம்பங்களாக பதிவாகி நம்மைப் பின்தொடர்கின்றன.
ஆளற்ற இடத்தில் வரும் ஒலியை குளவிகளின் சத்தமாக இருக்கும் என்று எண்ணி மனிதன் கடந்து போகிறான். அதே நேரத்தில் ஆளற்ற வனாந்தரத்தில் இலைகள் தூங்கிய நள்ளிரவில் வானத்தைப் பார்த்து மல்லாந்து கிடக்கும் உடைந்த கண்ணாடித் துண்டில் விண்மீன்கள் தெரிகின்றன. நாம் வாழ்க்கையில் செய்யும் செயல்களுக்கு பின்னால் இந்த விண்மீன் போன்ற மௌன சாட்சிகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை நாம் குளவிகளின் சத்தம் போலவே கடந்து கொண்டிருக்கிறோம். கண்ணாடியும் கடவுளும் ஒன்றே. கண்ணாடியைப் பார்க்கும் சமயங்களிலெல்லாம் நம்மைக் கடவுள் பார்க்கிறார் என்பதை உணர்ந்தால் நாம் வாழ்க்கையின் பாதையைச் சற்று கவனமாகவே கடந்து செல்வோம் என்பதை இக்கவிதை உணர்த்துகின்றது.

No comments:

Post a Comment