Friday, July 22, 2016

காகிதக் காதல் - ம.கோ. யோகேந்திர நிருருதிஸ்


அவள் என் கண்களை மட்டுமே பார்த்து பேசுவாள்!
நான் என் உதட்டின் மின்மினி மொழியால் இரசிப்பேன்
அவள் தனது பரம இரகசியங்களை
என்னிடம் மட்டுமே பகிர்வாள் என்ற
ஒரு நிச்சயம் எனக்கு இல்லை என்றாலும்
நான் அவளை இன்னும் காதலிக்கிறேன்..

அவளுக்கு ஆண்களோடு சேர்ந்து உட்காரும்
பழக்கமும் இல்லை அவசியமும் இல்லை.
அவளைச் சுற்றி தோழியர் கூட்டம் பிரிவதில்லை
அவளுக்கும் எனக்கும் தனிமை நிச்சயமில்லை
நான் அவள் தோழிகளோடு பேசினாலும்
அவளுக்கு என்மேல் கோபம் இருப்பதே இல்லை.

பெயருக்கு பெயர் போனவள் அவள்
யோசனைகளின் உயிரூற்றும் அவள்
அவள் பெற்றோர் நல்ல கல்வியாளர்கள்
இவளுக்கு பெயர் சூட்டுவதிலும் பெயர்போனவர்கள்
என்னென்ன பெயர்கள் இவளுக்கிருந்தாலும்
இவள் முன்னே இவள் பெயரைப் பிரயோகப்படுத்தினதில்லை!
ஆனால் எவர்க்கும் இல்லா சிறப்பம்சம்
இவளைப் பிறர்க்கு நான் அறிமுகம் செய்யும்போது
இவள் பெயரோடு இவள் பெற்றோர் பெயரையும்
சேர்த்து சொல்வேன் - கண்டுகொள்ளமாட்டாள்!

என்னைவிட இவளுக்கு பல மொழிகள் தெரியும் - ஆனால்
என்னோடு பேசும்போது ஒரே மொழிதான் மலரும்
அதுவும் கண்ணாலே பேசுவாள் கண்ணோடு பேசுவாள்.
அசையாமல் பேசுவாள் மௌனமாய்ப் பேசுவாள்.
எனக்கு பாஷைகள் பல கற்றுத் தருபவள் இவள்தான்
ஆனால் இத்தனைப் பெருமைகளை மறைக்கும்
இவளின் தன்னடக்கம் எனக்கிவளிடம் பிடித்த குணம்.

உன்னை நான் காதலிக்கிறேன், என் உயிரே!
நீயின்றி என் வாழ்வில் முழுமைக்கு இடமே இல்லை.
உனக்கன்றி என்வாழ்வில் இடமும் பிறர்க்கு இல்லை.
உனை எண்ணும் என் எண்ணத்தின் பயணங்கள் முடிவதில்லை..
புதுமைகளின் பதுமைகளாய் இதமாய் நீ நுதழ் விரித்தாய்..
மருள் போக்கி இருள் நீக்கி அருள்விளக்காய் ஒளிர்விட்டாய்..
என் இதயவாசலை உனக்காய்த் திறந்து வைக்கிறேன்..
நான் தினம் படிக்கும் புத்தகமே மீண்டும் அருள் பிரவேசி

                                                                   - ம.கோ. யோகேந்திர நிருருதிஸ்
                                                                        முதலாமாண்டு இளநிலை கணிதத்துறை
                                                                        எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, கோவை 


Thursday, July 21, 2016

தாய்மை – 2020 - Dr. JKSNRCS


பத்து மாதங்கள் கருவில் சுமந்து
பனிரெண்டு மாதங்கள் மடியில் சுமந்து மேலும்
பல மாதங்கள் தோளில் சுமந்து
பலவிதமாய் கைகளில் சுமந்து
பாராட்டி சீராட்டி வளர்த்த பாலகன்
பெற்றவளே! அம்மா! அம்மா! என
புலம்பித் தவித்த பின்னும், அள்ளியெடுக்க
பதறாதா நெஞ்சம்?
பறந்து வர இயலாமல் சிறகுகளைப்
பறித்தது யாரோ?
                                                               - Dr. JKSNRCS


Wednesday, July 20, 2016

அறம் செய விரும்பு – முனைவர் ப. ஜெயபால்


விண்வெளிக்குச் சென்ற
ஏவுகணை ஒன்றில்
பூமி திரும்பினார் காந்தி
பூலோகம் சொர்க்கம்
என்ற நினைப்பில் வந்தவருக்கு
காத்திருந்தது என்னவோ
அதிர்ச்சி ஆன்ராய்டுகள் மட்டுமே..

அறம் விதைத்து
விரிட்சி பெற்ற மரமொன்று
அத்துவானக் காட்டில் தன்னந்தனியாய்
அகிம்சையெல்லாம்
ஆயுதமேந்தி நடக்க
அண்ணார்ந்து பார்க்கும் ஊர்க்குருவிகள.
ஆன்மீகப் பாசறையில்
அடியாட்களாக கடவுளர்கள்.
இயற்கையின் இழந்த
இறக்கைகளுக்கு
மருந்துபோடும் மாடிவீடுகள்.
சாலை சாப்பிட்டு
மிஞ்சிய எலும்புத்துண்டுகளாக
அசோகரின் மரங்கள்.
காய்கறிகள் விலைபேசலில்
விற்பனையாகிப்போன மனிதர்கள்.

பசுமையிழந்த
மின்கம்பங்கள்...
பசியிழந்த
பாதசாரிகள்...
கட்சியிழந்த
கொடிமரங்கள்...
காட்சியிழந்த
டூரின் டாக்கீஸ்கள்...

மின்சார ரயில்களாக
மனிதர்கள்
மிதமிஞ்சிய குப்பைகளாக
மனிதநேயங்கள்

கணினி தேடிய மனிதன் தொடங்கி
கணினி தேடும் மனிதன் வரை
எல்லாம் வைரஸ்மயம்

பட்டாம் பூச்சிகள்
பாறாங்கல் சுமக்க
பிச்சைப்பாத்திரங்களோ
மனிதனைச் சுமக்க
வாகனங்களோ
மனிதமூட்டைச் சுமக்கும்..
வணிகச் சந்தைகளோ
உறக்கத்தை விற்பனை செய்யும்
இந்நகரத்தில்
முகவரி மாறிய பயத்தில்
மூர்ச்சையானார் காந்தி.
விழிப்பிற்குப்பின் தேடத்தொடங்கினார்
எங்கே விதைத்தோம்..
அல்லஅல்ல
எங்கே தொலைத்தோம் அறத்தை

அறம் செய விரும்பு

எங்கே செல்லும் இந்த பாதை

இப்பொழுதெல்லாம்
குழந்தையின்
ஏதிர்காலத்தில்
டாக்டர் இன்ஜினியரோடு
சூப்பர் சிங்கரும் சேர்ந்துகொள்கிறது.

இப்பொழுதெல்லாம்
அரசியல்வாதிகளின்
விவரக்குறிப்பில்
விவாத மேடையும்
இடம்பெற்றுக்கொள்கிறது.

இப்பொழுதெல்லாம்
குடும்ப சண்டைகளில்
சீரியல் சண்டைகளும்
இணைந்துகொள்கிறது.

பாட்டிக்கதைகளெல்லாம்
சோட்டாபீனாகவும்
கரடி சங்கமாகவும்
மாறிப்போனது.

பாட மதிப்பெண்கள் போய்
ஆட மதிப்பெண்கள்
அத்தியாவசியமாகிப் போனது.

வழுக்கைத் தலையில்
முடிநட்ட கதைகளும்
நரைமுடிக்கு
சாயம் பூசிய கதைகளும்
குண்டானவர்கள்
இளைத்த கதைகளும்
இளைத்தவர்கள்
பெருத்த கதைகளும்
என்று
காலை முதல் மாலை வரை
அலைகழிக்கப்படும் கதைகள்
இங்கே
ஏராளம்ஏராளம்

தட்டில் உணவு இருக்க
வேண்டிய இடத்தில்
தொலைக்காட்சி
உட்கார்ந்து கொண்டிருக்கின்றது.

உழைக்க வேண்டிய
கைகள் எல்லாம்
What app
Face book ல்
பிடித்த பாடலுக்கு
Request ம்
Like ம்
கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

தமிழும் ஆங்கிலமும்
கூட்டணி ஒப்பந்தம்
பெற்றுவிட்டன
தொகுப்பாளரின் வருணனைகளில்

மொழியைச் சிதைத்து
பண்பாட்டை வதைத்து
அழுகையை ரசித்து
ஆனந்தத்தைக் குறைத்து
எண்ணங்கள் நரைத்துப்போகும்
இந்தப் பாதையில்
வழித்துணைக்கு வருவோர்
தொலைக்காட்சியில்
தங்களைத் தொலைத்தவர்கள் மட்டுமே

Monday, July 4, 2016

முயற்சி -கவிதை


பாதங்கள் நடக்கத்  தயாராக இருந்தால் 
பாதைகள்  மறுப்பு சொல்லப் போவதில்லை 
பாதை வகுத்து நாம்  முயன்றால் 
பாரில்  அனைத்தும்  வென்றிடலாம் 

எட்டி  வைத்து  நாம்  முயன்றால் 
எல்லாமே எட்டி விடும் தூரம்தான் 
எட்டடி அன்றி ஒரு சமயம் ஓரடியே வைத்தால் 
எட்டாக்கனியல்ல வெற்றிக்கனி 

இலக்கு உயர்வாக இருந்தால் வெற்றி இலகுவாகும் 
இலவு  காத்த  கிளியல்ல இலட்சியவாதி 
இலையுதிர் கால மரமல்ல 
இளைப்பாற உதவும் கரங்கள் 

திட்டமிட்டு செயல்பட்டால் 
நம்மை  உணர்ந்து முடிவெடுத்தால் 
மற்றவர் பாதையின் தடைக்கல் 
நம் பாதையின் படிக்கல் 
             
                     முயற்சி இல்லாமல் வெற்றி இல்லை 
                     முயற்சி இருந்தால் தோல்வி இல்லை 
                                                                                                  ம. மதுமிதா 
                                        முதலாம்  ஆண்டு உயிர் தொழில்நுட்பவியல்(I B.Sc.Bio Tech)