பட்டாம்பூச்சியே நீ எதன் மொழிபெயர்ப்பாக பூமியில் தோன்றினாய்?
நீ பூமியில் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பளபளப்பிலிருந்து தோன்றினாயா? வைகறை நேரத்தில் அழகாய் விரியும் பூக்களின் கனவாக நீ தோன்றினாயா? அல்லது பச்சை நரம்புகளோடி தளிராக விரிந்திருக்கும் வெற்றிலையிலிருந்து தோன்றினாயா?
நீ உன் சிறகுகளை விரித்து படபடப்பதைக் கன்னிப் பெண்களின் அடர்ந்த கண் இமைகளிலிருந்து கற்றுக் கொண்டாயா?
உன்னுடைய சிறிய அழகுக் கண்களின் போலி விழிப்பை நாகப் பாம்பிடமிருந்து கற்றாயா?
மெத்தை போன்ற அழகிய உடலமைப்பை வானில் பறக்கும் பஞ்சு போன்ற வெண்பட்டு மேகக் கூட்டத்திலிருந்து பெற்றாயா?
தொட்டால் ஒட்டிக் கொள்ளும் சிறகுகளின் சாம்பல் வண்ணம் ஜப்பான் நகரில் இரண்டாம் உலகப் போரில் குண்டு வெடிப்பினால் எரியுண்ட ஹிரோஷிமாவின் சாம்பலிலிருந்து வந்ததா?
உன்னுடைய நீல வண்ணம் கிரேக்க நாட்டின் முதல் தத்துவ ஞானியான சாக்ரட்டீசுக்குக் கொடுக்கப்பட்ட விஷத்தின் கடைசித் துளியிலிருந்து வந்ததா?
மகாபாரத யுத்தத்தில் பழுப்பு அம்பு பட்டு இறந்த கிரௌஞ்சப் பறவைகளின் இரத்தில் இருந்து சிவப்பு வண்ணம் வந்ததா?
அழகிய உன்னுடைய மஞ்சள் வண்ணம் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெடித்துத் தொங்கும் வேர்ப் பலாவின் சுளையின் வண்ணமா?
உன் கருப்பு நிறம் இவ்வுலகின் ஆதி சூனியத்திலிருந்து வந்ததா? எனப் பட்டாம்பூச்சியின் அழகில் மயங்கி கேட்ட கேள்விகளுக்கு ‘அலசி விடை கூறக் காலமில்லை’ எனக் கூறி பட்டாம்பூச்சி பறந்து சென்றதுஇ மலர்களைத் தேடி...
No comments:
Post a Comment