கவிஞர் லதா சிங்கப்பூர் நாளிதழான தமிழ் முரசின் முதன்மை ஆசிரியர். கவிதை, சிறுகதை, விமர்சனம் எனப் பல்துறைகளிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். இவரின் ‘தீவெளி’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து இக்கவிதை எடுக்கப்பட்டது. இக்கவிதையில் சமுதாயம் மறந்துவிட்ட ஒரு பெண்ணின் உலகம் பற்றி பேசுகின்றது. உணர்வுகளும், உரிமைகளும் ஓர் அக்கினிச் சுவடாக மாறிவிட்ட ஒரு வலியை, வேதனையைப் பிரதிபலிப்பதாக இக்கவிதை உள்ளது.
சித்தார்த்தன் (புத்தனின் இயற்பெயர்) விட்டுச்சென்ற அவனின் மனைவி யசோதரையின் நிலையிலிருந்து பேசுகிறது இக்கவிதை. இந்த உலகம் கண்டுகொள்ளாத அவளின் காதலைப் பற்றி பேசுகின்றது. தனது கடைசி மூச்சை இழுத்து பிடித்தபடி நடந்து கொண்டிருக்கிறாள் யசோதரை. அவளின் உயிர் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்திற்குள் அடைந்து கிடக்கின்றது. அதை அவ்வப்போது வருடிக்கொள்கிறாள்.
இந்தச் சமுதாயத்தில் அவளின் காதல் சுரண்டப்பட்டது, பிய்த்து எறியப்பட்டது, வீதியெங்கும் விசிறியடிக்கப்பட்டது. இருந்தபோதும் அவள் கலக்கம்கொள்ளவில்லை. ஏனெனில் அவளுடைய கால்களை அவள் விடுதலையாகக் கொள்ளவில்லை. சமுதாயத்தில் ஆடவனைப் பிரிந்த பெண்களின் நிலை இதுதான் என்பதை இவளின் நிலை உணர்த்துகின்றது. இப்பெண்மை இன்னமும் விலைபேசப்படுகின்றது. விரட்டப்படுகின்றது. விருந்தாகிப்போகின்றது. ஆயினும் வீரம் பேசுவதற்கும் விட்டுக்கொடுப்பதற்கும் இப்பெண்தான் வேண்டியிருக்கின்றது.
பல துன்பங்களுக்கு இடையே அவளின் கருப்பையிலிருந்து உதிரம் சொட்டுச்சொட்டாய் வடிந்து கொண்டிருக்க கொடுமையான பாலை நிலத்தின் வழியே நடந்து செல்கிறாள் யசோதரை. அவள் கையிலுள்ள உயிர்ப்பாத்திரம் தீர்ந்துவிடக்கூடாது என்று சைத்தான்கள் பிராத்தனை செய்ய, தேவதைகள் அவளைப் பிராண்டியபடி செல்கின்றன. சூத்திரங்களும், மந்திரங்களும், கேள்விகளும், வேள்விகளும் என்று யாவையும் அவளைத் தொடர்கின்றன.
யசோதரையிடம் இருக்கும் கடைசி மூச்சை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று காத்திருக்கிறான் சித்தார்த்தன். அவனைச் சந்திப்பதற்கு முன் தன் உயிர் போய்விடக்கூடாது என்று தன் மூச்சுடன் பேரம் பேசுகிறாள் யசோதரை. ஒரு பெண் எதிர்ப்பார்க்கும் ஆணின் உலகம் என்பது வேறு. ஆனால் ஒரு ஆணின் உலகத்தில் பெண்ணின் உலகம் அடங்கிப்போய்விடுகின்றது.
பெண்ணிற்கான உரிமைகள் எல்லாம் உருவங்கள் அற்றவை. அட்சயப் பாத்திரத்திற்குள்ளேயே தன் உரிமைகளைப் புதைத்துக்கொண்டு அழுகி ஒழுகிப் போன அவளின் அழகிய கண்கள். அதனிடம் உருவங்கள் அற்ற அவளின் உரிமைகள் பற்றி கேட்டால் எந்த பதிலும் வரப்போவதில்லை என்பதே உண்மைநிலை.
No comments:
Post a Comment