Wednesday, July 20, 2016

அறம் செய விரும்பு – முனைவர் ப. ஜெயபால்


விண்வெளிக்குச் சென்ற
ஏவுகணை ஒன்றில்
பூமி திரும்பினார் காந்தி
பூலோகம் சொர்க்கம்
என்ற நினைப்பில் வந்தவருக்கு
காத்திருந்தது என்னவோ
அதிர்ச்சி ஆன்ராய்டுகள் மட்டுமே..

அறம் விதைத்து
விரிட்சி பெற்ற மரமொன்று
அத்துவானக் காட்டில் தன்னந்தனியாய்
அகிம்சையெல்லாம்
ஆயுதமேந்தி நடக்க
அண்ணார்ந்து பார்க்கும் ஊர்க்குருவிகள.
ஆன்மீகப் பாசறையில்
அடியாட்களாக கடவுளர்கள்.
இயற்கையின் இழந்த
இறக்கைகளுக்கு
மருந்துபோடும் மாடிவீடுகள்.
சாலை சாப்பிட்டு
மிஞ்சிய எலும்புத்துண்டுகளாக
அசோகரின் மரங்கள்.
காய்கறிகள் விலைபேசலில்
விற்பனையாகிப்போன மனிதர்கள்.

பசுமையிழந்த
மின்கம்பங்கள்...
பசியிழந்த
பாதசாரிகள்...
கட்சியிழந்த
கொடிமரங்கள்...
காட்சியிழந்த
டூரின் டாக்கீஸ்கள்...

மின்சார ரயில்களாக
மனிதர்கள்
மிதமிஞ்சிய குப்பைகளாக
மனிதநேயங்கள்

கணினி தேடிய மனிதன் தொடங்கி
கணினி தேடும் மனிதன் வரை
எல்லாம் வைரஸ்மயம்

பட்டாம் பூச்சிகள்
பாறாங்கல் சுமக்க
பிச்சைப்பாத்திரங்களோ
மனிதனைச் சுமக்க
வாகனங்களோ
மனிதமூட்டைச் சுமக்கும்..
வணிகச் சந்தைகளோ
உறக்கத்தை விற்பனை செய்யும்
இந்நகரத்தில்
முகவரி மாறிய பயத்தில்
மூர்ச்சையானார் காந்தி.
விழிப்பிற்குப்பின் தேடத்தொடங்கினார்
எங்கே விதைத்தோம்..
அல்லஅல்ல
எங்கே தொலைத்தோம் அறத்தை

அறம் செய விரும்பு

1 comment: