Wednesday, July 20, 2016

எங்கே செல்லும் இந்த பாதை

இப்பொழுதெல்லாம்
குழந்தையின்
ஏதிர்காலத்தில்
டாக்டர் இன்ஜினியரோடு
சூப்பர் சிங்கரும் சேர்ந்துகொள்கிறது.

இப்பொழுதெல்லாம்
அரசியல்வாதிகளின்
விவரக்குறிப்பில்
விவாத மேடையும்
இடம்பெற்றுக்கொள்கிறது.

இப்பொழுதெல்லாம்
குடும்ப சண்டைகளில்
சீரியல் சண்டைகளும்
இணைந்துகொள்கிறது.

பாட்டிக்கதைகளெல்லாம்
சோட்டாபீனாகவும்
கரடி சங்கமாகவும்
மாறிப்போனது.

பாட மதிப்பெண்கள் போய்
ஆட மதிப்பெண்கள்
அத்தியாவசியமாகிப் போனது.

வழுக்கைத் தலையில்
முடிநட்ட கதைகளும்
நரைமுடிக்கு
சாயம் பூசிய கதைகளும்
குண்டானவர்கள்
இளைத்த கதைகளும்
இளைத்தவர்கள்
பெருத்த கதைகளும்
என்று
காலை முதல் மாலை வரை
அலைகழிக்கப்படும் கதைகள்
இங்கே
ஏராளம்ஏராளம்

தட்டில் உணவு இருக்க
வேண்டிய இடத்தில்
தொலைக்காட்சி
உட்கார்ந்து கொண்டிருக்கின்றது.

உழைக்க வேண்டிய
கைகள் எல்லாம்
What app
Face book ல்
பிடித்த பாடலுக்கு
Request ம்
Like ம்
கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

தமிழும் ஆங்கிலமும்
கூட்டணி ஒப்பந்தம்
பெற்றுவிட்டன
தொகுப்பாளரின் வருணனைகளில்

மொழியைச் சிதைத்து
பண்பாட்டை வதைத்து
அழுகையை ரசித்து
ஆனந்தத்தைக் குறைத்து
எண்ணங்கள் நரைத்துப்போகும்
இந்தப் பாதையில்
வழித்துணைக்கு வருவோர்
தொலைக்காட்சியில்
தங்களைத் தொலைத்தவர்கள் மட்டுமே

3 comments:

  1. சொல்லொண்ணா வேதனையில்
    சொல்லி அழ யாருமின்றி
    புலம்பினால் பரிகசிக்க
    புதிய தலைமுறை காத்திருக்க…
    உள்ளக்குமுறலை
    உள்ளுக்குள்ளே புதைத்து வைத்து
    எள்ளி நகையாடும் மாந்தர் முன்
    ஏங்கித் தவித்த எனக்கு
    இப்படைப்பு
    எழுதத் தெரியாத
    எங்களைப் போன்றோரின்
    எண்ணங்களைப் பிரதிபலித்து
    ‘எங்கே செல்லும் இந்தப் பாதை?’ என்ற
    அடிப்படைக் கேள்வியால்
    அனைவரையும் சிந்திக்க வைத்தது
    ஆறுதலாய்… அவசியமானதாய்…
    அருமையாய் இருந்ததினால்
    உள்ளத்தின் ஆழத்திலிருந்து
    ஒரு ‘நன்றி’.
    - ஹேனா ரேவதி

    ReplyDelete