Tuesday, February 14, 2017

திருவெழுகூற்றிருக்கை – அருணகிரிநாதர்

பிரம்மனிடத்திலிருந்து மானுடப் பிறப்பில் ஒப்பற்ற ஆறு தனிச் சேய்களான வகையில் தோன்றியவன். தாய் தந்தை மரபுகளைப் பெற்று இருமரபினையும் ஒன்றாக்கியதுபோல் ஆறு முகங்களும் ஒரு சேரப் பெற்று சிவன், சக்தி என்ற இருவர் அம்சமாய் அவதரித்தவன். மூப்பு என்பது எப்பொழுதும் இன்றி குமரனாகவே இருந்தருள்பவன். அந்தணர்களுள் ஒப்பற்றவனாய் இருக்கின்றான்.     
            பெருமிதத்தின் காரணமாக பரமதேவன் சிவபெருமானை பார்க்கச் சென்ற காலத்தில் குமரனை வணங்காமல் போகவே அவன் சினந்து அவனது தலைமுடியை ஒரு நொடிப்பொழுதில் களைந்து மொட்டையாக்கியவன். தனது தந்தையாகிய சிவபெருமான், திருமால், பரமன் மூவரும் எழுந்தருளி வந்து குமரனின் திருவடிகளில் வீழ்ந்து பிராத்திக்கவே ஒற்றைச் சிறையினின்றும் விடுவித்து அருளினான்.
            கண்ணிமைக்கும் பொழுதிற்குள்ளே பெரிய சிறகுகளையுடைய மயிலின் மீதேறிக் கடலாற் சூழப்பட்ட நிலவுலகம் அஞ்சும்படி சுற்றி வந்தவன். நான்கு பகுதிப்பட்ட தந்தங்களையும் மூன்றிடங்களிற் பெருகும் மதநீரையும் இரண்டு காதுகளையும் ஒப்பற்ற (ஒரு) தும்பிக்கையையும் உடைய மலை போன்ற ஐராவதத்தினையுடைய (காப்பில் வளர்ந்த) பெண்ணாகிய தெய்வயானையை விரும்பித் திருமணம் செய்து கொண்டவன்.
            ஒரு வகையாகிய யானை வடிவத்திலேயே யானை உருவும் மானிட உருவும் ஆகிய இருவகையான வடிவம் தாங்கிய விநாயகர் தனக்கு முன் பிறந்தவனாக இருக்கும்படி, தொங்குகின்ற வாயையுடைய யானை முகத்தோனும் ஐந்துகரங்களையுடைய கடவுளுமாகிய அறுகம்புல்லைச் சூடிக் கொண்டுள்ள விநாயகனுக்குத் தம்பியாய்  தோன்றியவன்.
            நான்கு வேதங்களும் தெரிய வைக்கின்ற முக்கண்களையுடைய ஒளிவடிவினனாவனும், தீவினைகளைப் போக்கும் மருந்து போலானவனுமாகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற குருநாதனாக  விளங்கியவன். ஒருநாள் தந்தையார் பிரம தீர்த்தத்தில் நீராடச் செய்யச்சென்ற போது உடனழைத்துச் சென்ற அந்த நாளில், தோணிபுரத்து உமையம்மை இருமுலைகளிலும் பெருகிய பாலைப் பொற்கிண்ணத்தில் கொடுக்க அருந்தி, ‘இந்தப்பிள்ளை முத்தமிழிலும் வல்ல திறவோன், நாற்கவி பாடுதலிற் சக்கரவர்த்தி, ஐம்புலன்களுக்கும் தலைவனாகிய மன்மதன், சண்முகனாகிய செவ்வேள்என்று சொல்லப்படும் படியும் மேன்மேல் எழுச்சிதரும் படியான அழகோடு சீகாழியில் தோன்றியவன்.
            கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரால் பாலூட்டப் பெற்று வளர்க்கப் பெற்றவன். இந்திரனுக்காக நான்கு வேதங்களின் அம்சமாய்த் தோன்றியுள்ள மூன்று பிளவுளதாகிக் கவர்த்த சிவந்த கொண்டையை உடையதான ஒப்பற்ற வேலாயுதத்தை கிரௌஞ்சகிரி இருதுண்டாகி விழும்படிச்  செலுத்தியவன். காவிரியாற்றின் வடக்குக்கரையில் அமைந்துள்ள சுவாமிமலையில் நித்தியவாசம் செய்து கொண்டிருக்கும்நம : குமாராயஎன்று ஆறெழுத்து மந்திரத்தை இடைவிடாதுரைக்கின்ற அந்தணர்கள் நினது இரண்டு திருவடிகளையும் துதித்துப் புகழக்கூடிய  தனிப்பெருங்கடவுளாக வீற்றிருந்து அருள்பவன் என்று அருணகிரியார் குமரபெருமானின் புகழைப்பாடுகின்றார்.


No comments:

Post a Comment