Saturday, November 19, 2016

பாரத தேசம்

பாரத தேசம்
(ராகம்புன்னாகவராளி)
பல்லவி

பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்மிடிப்
பயம்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்

பொருள் : இந்தியா என்னும் பெயரை உச்சரிப்பவர் எவரோ, அவர் வறுமை பற்றிய அச்சத்தை அடியோடு நீக்கி விடுவார். துன்ப துயரங்களாகிய பகையை வெற்றிகொள்வார்.

குறிப்புரை : மிடிவறுமை. துயர்ப்பகை என்பதற்கு , “துன்பம் செய்கின்ற பகைவர்களைஎன்றும் பொருள் கூறலாம். பாரத தேசம் என்னும் பெயர் சக்தி மிக்க மந்திரத்தைப் போன்றது. அந்தப் பெயரை உச்சரித்தாலே அச்சம் அகன்று விடும். துன்ப துயரங்களை வென்று விடலாம் என்பது இப்பல்லவியின் கருத்து.
சரணங்கள்
1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல்விடுவோம்
பள்ளி தலமனைத்தும் கோயில்செய்கு வோம்எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்

பொருள் : இமயமலையின் உச்சியில் உலாப் போவோம். கீழ்த்திசையிலும் மேற்றிசையிலும் உள்ள சமுத்திரங்களிலெல்லாம் எங்கள் மரக்கலங்களைச் செலுத்துவோம். கல்விக் கூடங்கள் எல்லாவற்றையும் தெய்வ ஆலயத்தைப் போலப் புனிதமுடையவையாய் ஆக்குவோம். எமது இந்திய தேசம் என்று பெருமிதத்துடன் சொல்லித் தோள்களைத் தட்டி ஆடுவோம்.
            இந்தச் சரணத்திலும் இனிவரும் சரணங்களிலும், எதிர்கால பாரதம் எப்படி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் ; என்னவென்னவெல்லாம்  செய்ய வேண்டும் என்னும் தம் இலட்சிய கனவுகளைப் பாரதி பதிவு செய்திருக்கிறார்.
                            
2. சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்
                                                                                                                          
பொருள் : இலங்கைத் தீவுக்கு ஒரு பாலம் கட்டுவோம். (இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட) சேதுப்பகுதியை உயரமாக்கி தெரு அமைப்போம். வங்கதேசத்தில் பாயும் நதிகளின் அதிகப்படியான நீரைத் திசை திருப்பிக் கொண்டு வந்து, இந்தியாவின் நடுவிலுள்ள மாநிலங்களில் வேளாண்மை செய்வோம்.

3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப்போம்
எட்டுத் திசைகளிலும் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்

பொருள் : சுரங்கங்கள் வெட்டி தங்கம் முதலான வேறு பல தாது பொருள்களையும் தோண்டி வெளிக்கொணர்வோம். இவற்றைத் திசைகள் எட்டிலும் உள்ள தேசங்களுக்கெல்லாம் கொண்டு சென்று வியாபாரம் செய்து (அந்தத் தேசங்களிலிருந்து) நாங்கள் விரும்பும் பொருள்கள் எல்லாவற்றையும் இந்தியாவிற்குக் கொண்டு வருவோம்.

4. முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே
நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே

பொருள் : நாம் முத்தெடுப்பது தென்புறக் கடற்பகுதியாகும். பல்வேறு தேசத்தவர்களாகிய வியாபாரிகளும் வந்து குவிந்து, நமக்கு விருப்பமான பொருள்களை விரும்பிக் கொண்டு வந்து, நம் ஆதரவைக் கேட்டு நிற்பது மேற்குக் கடற்கரைப் பகுதியாகும்.

5. சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிகள் ஓட்டிவிளை யாடிவருவோம்

பொருள் : நிலவொளி வீசும் ரம்மியமான இரவுப் பொழுதில் சிந்து நதியின்மீது, சிறந்த கேரள மாநிலக் கன்னியர்களுடன் இணைந்து, இனிமையான தெலுங்கு மொழியில் கானம்பாடி, படகுகள் செலுத்திக் குதூகலமாய் பொழுதுபோக்கி வருவோம்.
            இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்குள்ளும் இணக்கமான போக்கு இருக்க வேண்டும்; வடநாடுதென்நாடு என்ற பேதமோ, மொழிக் காழ்ப்புணர்ச்சியோ இருக்கக் கூடாது என்னும் கருத்தை இவ்விதம் கவிநயத்துடன் பாரதி வெளிப்படுத்தியிருக்கிறார்.

6. கங்கை நதிபுறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்

பொருள் : கங்கையாற்றங் கரையில் விளைகின்ற கோதுமைத் தானியத்தைக் காவிரியாற்றங் கரையில் விளைகின்ற வெற்றிலைக்குப் பண்டமாற்றாகப் பெற்றுக் கொள்வோம். சிங்கத்தைப் போல் வீரம் மிக்க மராட்டியர்களது கவிதைகளை வாங்கிக் கொண்டு, கேரள நாட்டு யானைக் கொம்புகளை அவர்களுக்குச் சன்மானமாக வழங்குவோம்.

7. காசி நகர்ப்புலவர் பேசுமுரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்
ராசபுத் தானத்து வீரர்தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கமளிப்போம்

பொருள் : காசி நகரத்திலுள்ள பாவலர்கள் அங்கிருந்தபடியே ஆற்றுகின்ற சொற்பொழிவை, காஞ்சி நகரத்தில் இங்கிருந்தபடியே நாம் செவிமடுப்பதற்கு ஒரு சாதனத்தை உருவாக்குவோம். ராஜஸ்தானின் வீரர்களுக்கு கர்நாடகத்தில் எடுக்கப்படும் சிறந்த பொன்னைப் பரிசளிப்போம்.

8. பட்டினில் ஆடையும் பஞ்சிலுடையும்
பண்ணி மலைகளென வீதிகுவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவைகொடுப்போம்

பொருள் : பட்டாலும் பஞ்சாலும் பலவித உடைகள் தயாரித்து தெருக்களில் மலைகளைப் போல் சேர்த்து வைப்போம். திரளான செல்வங்களை எடுத்துக் கொண்டு வருபவர்களான உலகளாவிய வியாபாரிகளுக்கு அவற்றை விற்போம்.

9. ஆயுதம்செய் வோம்நல்ல காகிதம்செய்வோம்
ஆலைகள்வைப் போம்கல்விச் சாலைகள்வைப்போம்
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள்செய்வோம்

பொருள் : கருவிகள் பலவற்றை உருவாக்குவோம். தரமான தாள்கள் தயாரிப்போம். தொழிற்கூடங்களை ஏற்படுத்துவோம். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை அமைப்போம். செயலிழந்து போகமாட்டோம். (பிறர்முன்) சிரம் தாழ்த்திக் கூழைக் கும்பிடு போடமாட்டோம். வாய்மையானவற்றையே பேசுவோம். பல்வேறு தான தர்மங்கள் புரிவோம்.
10. குடைகள்செய் வோம்உழு படைகள்செய்வோம்
கோணிகள்செய் வோம்இரும் பாணிகள்செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய்வோம்

பொருள் : குடைகள் தயாரிப்போம். கலப்பைகள் உருவாக்குவோம். சாக்குப் பைகள் உற்பத்தி செய்வோம். இரும்பாலாகிய ஆணிகள் உண்டு பண்ணுவோம். தரைவழியாகவும், ஆகாய வழியாகவும் செல்ல வல்ல வாகனங்களை ஏற்படுத்துவோம். உலகமே கண்டு அஞ்சும்படியான கப்பல்களைக் கட்டமைப்போம்.

11. மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற்போம்
வானைஅளப் போம்கடல் மீனைஅளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற்போம்

பொருள் : வேதங்களைப் படித்தறிவோம். பல்வேறு செயல்கள் செய்வதற்குரிய சூட்சுமங்களைக் கற்றுத் தெளிவோம். வான்மண்டலத்தை ஆராய்வோம். மீன் முதலிய கடல்வாழ் உயிரினங்களை ஆராய்வோம். சந்திர மண்டலத்தின் உண்மை நிலையை ஆராய்ந்தறிந்து தெளிவடைவோம். சதுக்கங்களையும், வீதிகளையும் அதிகமாகக் கட்டமைப்பதற்குரிய அறிவுத்துறையைக் கற்றுப் பயன்படுத்துவோம்.

12. காவியம் செய் வோம்நல்ல காடுவளர்ப்போம்
கலைவளர்ப் போம்கொல்ல ருலைவளர்ப்போம்
ஓவியம்செய் வோம்நல்ல ஊசிகள்செய்வோம்
உலகத் தொழிலனைத்தும் உவந்துசெய்வோம்

பொருள் : காப்பியங்கள் இயற்றுவோம். சிறந்த வனப்பிரதேசங்களைப் பராமரிப்போம். நுண்கலைகளை மேலோங்கச் செய்வோம். கொல்லர்களின் பட்டறைத் தொழிலையும் சிறப்படையச் செய்வோம். சித்திரம் தீட்டுவோம். ஊசி முதலாகிய கைவினைக்கு உதவும் கருவிகள் பலவற்றைத் தயாரிப்போம். இந்த அகிலத்தில் என்னென்ன தொழில்கள் உண்டோ, எல்லாவற்றையும் குதூகலத்துடள் செய்வோம்.

13. சாதி இரண்டொழிய வேறில்லையென்றே
தமிழ்மக்கள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர் ; கீழவர்மற்றோர்


பொருள் : இரண்டே இரண்டு சாதிகளைத் தவிர உலகத்தில் வேறொரு சாதியில்லை என்று தமிழர்கள் முன்பே உரைத்த வாக்கினை அமிழ்தத்தைப் போல் இனிமையானது ; நமக்குச் சாவா நிலை நல்கக் கூடியது என்று சொல்லிக் கொண்டாடுவோம். அறத்தின் வழியிலிருந்து விலகிடாமல் மற்றவர்களுக்கு உபகாரம் செய்யும் நல்லவர்களே மேல்சாதியினர். அவ்விதம் உபகாரம் செய்யாத மற்றவர்களே கீழ்சாதியினர்.

31 comments:

  1. Tamil project use in pharatha desam ;thank you so mush and good

    ReplyDelete
  2. Thank you mam, it was useful for my internals sem exam.

    ReplyDelete
  3. Heading பாரத தேசம்

    ReplyDelete