Thursday, February 16, 2017

திருமந்திரம் – திருமூலர்



தானச்சிறப்பு
            அவர் இவர் என்று எண்ணாமல் நாம் அனைவருக்கும் கொடுத்து உதவுதல் வேண்டும். எப்பொழுதும் விருந்தினர்களை எதிர்பார்த்திருத்தல், பழமையான உணவுப்பொருள்களை அறிந்து பாதுகாத்து வைத்தல் நன்று. உணவை விரும்பி உண்பதும் வேகமாக உண்பதைத் தவிர்த்தலும் நம் உடலுக்கு நல்லதாகும். காகமானது தனக்கு உணவு கிடைக்கும் பொழுது தன் கூட்டத்தைக் கரைந்து அழைக்கும். அதுபோல மனிதனின் தானச்சிறப்பு அமைய வேண்டும்.
அறச்சிறப்பு
            இறைவனை ஒரு பச்சிலையைக் கொண்டு அனைவராலும் வணங்க முடியும். பசுவினையுடைய பசியை ஒரு வாய் உணவினைக் கொண்டு அனைவராலும் போக்கமுடியும். நாம் உண்ணும் உணவில் ஒரு கைப்பிடி உணவைக் கொடுத்து உதவ அனைவராலும் முடியும். அதேபோல் சான்றோர் பெருமக்கள் சொல்லக்கூடிய நற்கருத்துக்களைக் கேட்க செவிமடுத்தல் என்பதும் அனைவரும் செய்யக்கூடிய செயலே.
அன்புடைமை
          அறிவில்லாதவர் அன்பும் சிவமும் வேறுவேறு என்பர். அன்பும் சிவமும் ஒன்று என்று அறிய முற்படுபவர்கள் அதனை அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பார்கள்.  தம்முடைய உடலை துண்டு துண்டாக விறகுபோல் கறுக்கி தீயிலிட்டு இறைவனுக்குப் படைத்தாலும், அன்போடு உருகி இறைவனை வழிபடுபவருக்கே இறைவனுடைய அருள் கிட்டும்.
உடம்பினைப் பேணுதல்
            உடம்பினை முன்னர் இழுக்கு என்று இருந்தேன். உடம்பினுள் இருக்கக்கூடிய உண்மைப்பொருளைக் கண்டேன். உடம்பினுள்ளே உத்தமனாகிய இறைவன் கோயில் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்து என் உடம்பினைப் போற்றுகின்றேன். அண்ணலாகிய இறைவன் இருக்கும் இடத்தை யாரும் அறியவில்லை. அண்ணல் இருக்குமிடத்தை அறிந்து கொள்வார்க்கு தம் உள்ளே அழிவின்றி அமர்ந்திடும் அண்ணலைக் காணும் பொழுது அவன் இறைவனாகுவான்.

இறைவனைக் காணல்
            நம்முடைய உள்ளம் பெரிய கோவில். ஊன் உடம்பானது ஆலயமாகும். வள்ளல்பிரானைக் காணக்கூடிய வாயானது கோபுர வாசலாகும். தெள்ளத் தெளிந்தவர்க்கு உயிரே சிவலிங்கமாகும். உடலில் உள்ள ஐம்புலனும் தூங்காத மணி விளக்காக உள்ளது. கோயிலிலே வீற்றிருக்கும் இறைவனைத் தேடி கொண்டிருக்கும் நாம் நம்மிடையே நடமாடிக் கொண்டிருக்கும் அடியவர்களை அடையாளம் காண்பதில்லை. நம்மிடையே நடமாடும் அடியவர்களுக்குச் செய்யும் ஈகையானது கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப்போய் சேரும்.
வாழ்வின் பயன்
            இந்த உலகத்தில் அனைவரும் ஒரே குலம். அனைவருக்கும் ஒரே இறைவன். அதனை நன்கு நினைத்தோமெனில் நமக்கு எவ்வித துன்பமுமில்லை. நாம் கதியாகச் சென்று சேரக் கூடிய ஒரே இடம் இறைவனுடைய பாதமாகும். நாம் வாழ்வு நிலைபெற இறைவனை வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட யானையின் உருவம் மரத்தை மறைத்தது. அது மரமாகப் பார்க்கும்பொழுது யானை மறைந்த்து. அதுபோல் பரம்பொருளை உலகத்தில் உள்ள ஐம்பூதமும் மறைத்துக் கொண்டுள்ளது. அவை பரம்பொருளாகத் தெரியும் பட்சத்தில் பூதம் மறைந்திருக்கும்.

No comments:

Post a Comment