உயிர்களெல்லாம் பிழைக்கும்படி உலகங்களைப் படைத்து, பிரளய காலத்தில்
அவற்றை உண்ட வயிற்றை உடையவனே! பல ஊழிக்காலங்களிலும் ஆலிலையின்மேல்
உன்திருவயிற்றிலுள்ள உலகங்கள் அசையாதபடி மெல்ல யோகநித்திரை செய்த பெருமானே!
தாமரை போன்ற நீண்ட திருக்கண்களையும் மைபோலக் கரியதான திருமேனியையும்
உடையவனே! தலைவனே! திருமகள் தங்கும் உன்
திருமார்பு, நீ ஆடும்போது அசையாதபடி காப்பினை உடைத்தாக வேண்டும்
என நீ நினைத்துக்கொண்டு எனக்காக ஒருமுறை செங்கீரையாட வேண்டும். மகரக்குழைகள் அணிந்த காதுகள் மிகவும் ஒளிவிட, என் பொருட்டாக
ஒருமுறை நீ செங்கீரை ஆடி அருள்க. ஆயர்களின் போர் ஏறே செங்கீரை
ஆடுக.
இரணியன் புதல்வனை மெய்யன்
எனக்காட்ட, நரசிம்மமாகத் தோன்றி அவ்வசுரன் உடலைக் கூறிய நகங்களால்
கிழித்துக் குருதி குழம்பியெழக் கொன்றாயே! தேவேந்திரன் மிகச்
சினந்து மேகங்களை ஏவிக் கல்மழை பெய்யச் செய்த பொழுது, (கோவர்த்தன)
மலையைக் குடையாகப் பிடித்துப் பசுக்களைக் காத்தவனே! ஆண்மையாளனே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுக! ஆயர்கள் போரேறே ஆடுக, ஆடுகவே. எங்களுக்குத்
தலைவனே! நான் மறையின் பொருளாய் இருப்பவனே! உன் கொப்பூழ் தாமரையிற் பிறந்த நான்முகனுக்குத் தாய் ஆனவனே! பூமி முழுவதுடன் நட்சத்திரம் நிலவும் ஆகாயம் வரை கால்களைப் பரப்பி,
அதற்கு மேலும் வளர்ந்த திரிவிக்கிரமனே! குவலயா
பீடம் என்னும் யானையையும் ஏழு காளைகளையும் மோதி வென்றவனே! தலைவனே!
எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடி அருள்க! ஆயர்கள்
போரேறே! ஆடுக ஆடுகவே.
தேவர்கள் மகிழ, வலிய சகடாசுரன் உருண்டுமாள வஞ்சனைப்பூதனையின் மார்பு நெஞ்சை அமுதமாகக் குடித்தவனே!
காட்டிலே வலிய விளாமரத்தின் காய்களை உதிரச் செய்யக் கன்றினைக் கொண்டு
அதன் மீது எறிந்த - கரியநிறமுடைய
என்கன்றே! தேனுகன், முரண், நரகன் எனும் அசுரர்களை அழித்த போர்யானையே! எனக்காக ஒருமுறை
செங்கீரை ஆடுக. ஆயர்கள் போர் ஏறே! ஆடுக,
ஆடுகவே! நீண்ட கூந்தலையுடைய அழகிய இடைப்பெண்கள்
மத்தாலே கடைந்த தயிரையும் நெய்யையும் அவர்கள் அறியாதபடி அள்ளி விழுங்கினாய்.
உன்னைக் கொல்லும் நினைப்போடு இணை மருதங்களாய் நின்ற அசுரர்களை உன் தொடைகளினாலும்
கைகளினாலும் தள்ளியளித்தாய். உன் முத்துப்பற்களின் புன்முறுவல்
தோன்று முன்னேயே அழகு பொருந்திய உன்முடியானது உன்முகத்தில் தாழ்ந்து நீ ஒருதடவை செங்கீரை ஆடி அருளுக.
ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே.
காயாம் பூ நிறத்தவனே!
நீலமேக உருவத்தாய், காட்டில் பெரிய மடுவில் காளிங்கன்
தலையிலே நடனம் செய்த அழகனே! என் மகனே! மதமிகுந்த
குவலயாபீடம் எனும் யானையின் கொம்புகளைப் பறித்தவனே! மற்போர் வகை
தெரிந்து வந்த மல்லர்களை உனக்கு ஆபத்தின்றி அழித்துக் கூத்தாடிய இரண்டு திருவடிகளையுடையவனே!
ஆயனே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுவாயாக.
ஆயர்கள் போரேறே செங்கீரையாடுவாயாக. ஒரு காலத்தில்
வலிமையுடைய இடையர்களின் சொல்தவறாமல்
- கறுத்த கூந்தலையுடைய மயில்போன்ற நப்பின்னையை மணப்பதற்காகக்
கொடிய காளைகள் ஏழையும் அடக்கிய வல்லமை உடையவனே! ஒளிமயமான பரமபதத்துக்கே
உன்தேரைச் செலுத்தி, கைதப்பிப்போன அந்தணன் பிள்ளைகளை மீட்டுத்தாயுடன்
கூட்டிய என் அப்பனே! எனக்காக ஒருமுறை செங்கீரையாடுவாயாக!
ஆயர்கள் போரேறே செங்கீரையாடுவாயாக.
என்றும் நிலைநிற்பதான திருக்குறுங்குடி
என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருப்பவனே! திருவெள்ளறையில்
உறைபவனே! மதில் சூழ்ந்த திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவனே!
திருக்கண்ணபுரத்து அமுதே! என்னுடைய துன்பத்தைப்
போக்குபவனே! உன்னை இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு தத்தம் இல்லங்களுக்குச்
சென்று தங்கள் கருத்துக்குத்தக்கவாறு உன்னோடு உறவாடுகின்ற கன்னியர்கள் மகிழவும்,
காண்பவர்கள் கண்குளிரவும், கற்றவர்கள் பிள்ளைக்
கவிபாடவும் நீ செங்கீரையாடுவாயாக, உன்னை மகனாகப் பெற்ற என் மனம்
மகிழும்படி ஏழுலகங்களுக்கும் தலைவனே! நீ செங்கீரையாடுவாயாக.
நான்கு வேதங்களுக்கும் பொருந்தும்
பொருளாயிருப்பவனே! (ஆடி வரும் உன் அசைவிலே) பால், தயிர், நெய் வாசனையும்
– சந்தனம், செண்பகப்பூ, தாமரை,
சிறந்த பச்சைக் கற்பூரம் இவற்றின் மணமும் கலந்து வரவும், உன் பவளவாயினிலே வெள்ளிமுளைத்ததுபோலச் சிலபற்கள் ஒளிவிடவும், உன்னுடைய நீலநிற மார்பில் ஐம்படைகள் நடுவே கனிவாயிலிருந்து வரும் உமிழ்நீர்
அமிழ்தமாக இற்று இற்று விழவும் நீ செங்கீரையாடுவாயாக! ஏழுலகங்களுக்கும்
நாயகனே! நீ செங்கீரையாடுவாயாக. எங்கள் குடிக்கு
அரசே! உன் திருவடிகள் செந்தாமரை போன்றவை. விரல்களோ பூவின் உள்ளிதழ் போன்றவை. அவற்றில் உள்ள திருவாழி
மோதிரங்களும், கால்சதங்கைகளும், இடையிலுள்ள
பொன் அரைநாணும், பொன்னால் செய்த காம்பை உடைய மாதுளம் பூக்கோவையும்,
இடையிடையே கலந்து கோத்த பொன்மணிக் கோவையும், திருக்கையிலுள்ள
மோதிரங்களும், மணிக்கட்டிலுள்ள சிறுபவள வடமும், திருமார்பில் உள்ள ஐம்படைத்தாலியும், தோள்வளைகளும்,
காதணிகளும், மகரகுண்டலங்களும், காதின் மேல் அணிந்துள்ள வாளிகளும் நெற்றிச் சுட்டியும் அழகுடன் விளங்கும்படி
நீ செங்கீரையாடுவாயாக. ஏழுலகும் உடையவனே, நீ செங்கீரையாடுவாயாக.
‘அன்னம், மீன், நரசிம்மன், வாமனன்,
ஆமை ஆக அவதரித்தவனே! என் இடர் நீக்கிய ஆயர்தலைவனே!
நீ செங்கீரை ஆடு’ என்று அன்ன நடையாள் அசோதை விரும்பி
வேண்டியதைப் புதுவைப்பட்டர் பிரானாகிய பெரியாழ்வார் இன்னிசை மாலைகளாக அருளினார்.
இப்பத்தையும் ஓதவல்லவர்கள் உலகில் எண்திசைகளிலும் புகழும் இன்பம் பெறுவார்கள்.
No comments:
Post a Comment