Thursday, February 16, 2017

திருமந்திரம் – திருமூலர்



தானச்சிறப்பு
            அவர் இவர் என்று எண்ணாமல் நாம் அனைவருக்கும் கொடுத்து உதவுதல் வேண்டும். எப்பொழுதும் விருந்தினர்களை எதிர்பார்த்திருத்தல், பழமையான உணவுப்பொருள்களை அறிந்து பாதுகாத்து வைத்தல் நன்று. உணவை விரும்பி உண்பதும் வேகமாக உண்பதைத் தவிர்த்தலும் நம் உடலுக்கு நல்லதாகும். காகமானது தனக்கு உணவு கிடைக்கும் பொழுது தன் கூட்டத்தைக் கரைந்து அழைக்கும். அதுபோல மனிதனின் தானச்சிறப்பு அமைய வேண்டும்.
அறச்சிறப்பு
            இறைவனை ஒரு பச்சிலையைக் கொண்டு அனைவராலும் வணங்க முடியும். பசுவினையுடைய பசியை ஒரு வாய் உணவினைக் கொண்டு அனைவராலும் போக்கமுடியும். நாம் உண்ணும் உணவில் ஒரு கைப்பிடி உணவைக் கொடுத்து உதவ அனைவராலும் முடியும். அதேபோல் சான்றோர் பெருமக்கள் சொல்லக்கூடிய நற்கருத்துக்களைக் கேட்க செவிமடுத்தல் என்பதும் அனைவரும் செய்யக்கூடிய செயலே.
அன்புடைமை
          அறிவில்லாதவர் அன்பும் சிவமும் வேறுவேறு என்பர். அன்பும் சிவமும் ஒன்று என்று அறிய முற்படுபவர்கள் அதனை அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பார்கள்.  தம்முடைய உடலை துண்டு துண்டாக விறகுபோல் கறுக்கி தீயிலிட்டு இறைவனுக்குப் படைத்தாலும், அன்போடு உருகி இறைவனை வழிபடுபவருக்கே இறைவனுடைய அருள் கிட்டும்.
உடம்பினைப் பேணுதல்
            உடம்பினை முன்னர் இழுக்கு என்று இருந்தேன். உடம்பினுள் இருக்கக்கூடிய உண்மைப்பொருளைக் கண்டேன். உடம்பினுள்ளே உத்தமனாகிய இறைவன் கோயில் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்து என் உடம்பினைப் போற்றுகின்றேன். அண்ணலாகிய இறைவன் இருக்கும் இடத்தை யாரும் அறியவில்லை. அண்ணல் இருக்குமிடத்தை அறிந்து கொள்வார்க்கு தம் உள்ளே அழிவின்றி அமர்ந்திடும் அண்ணலைக் காணும் பொழுது அவன் இறைவனாகுவான்.

இறைவனைக் காணல்
            நம்முடைய உள்ளம் பெரிய கோவில். ஊன் உடம்பானது ஆலயமாகும். வள்ளல்பிரானைக் காணக்கூடிய வாயானது கோபுர வாசலாகும். தெள்ளத் தெளிந்தவர்க்கு உயிரே சிவலிங்கமாகும். உடலில் உள்ள ஐம்புலனும் தூங்காத மணி விளக்காக உள்ளது. கோயிலிலே வீற்றிருக்கும் இறைவனைத் தேடி கொண்டிருக்கும் நாம் நம்மிடையே நடமாடிக் கொண்டிருக்கும் அடியவர்களை அடையாளம் காண்பதில்லை. நம்மிடையே நடமாடும் அடியவர்களுக்குச் செய்யும் ஈகையானது கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப்போய் சேரும்.
வாழ்வின் பயன்
            இந்த உலகத்தில் அனைவரும் ஒரே குலம். அனைவருக்கும் ஒரே இறைவன். அதனை நன்கு நினைத்தோமெனில் நமக்கு எவ்வித துன்பமுமில்லை. நாம் கதியாகச் சென்று சேரக் கூடிய ஒரே இடம் இறைவனுடைய பாதமாகும். நாம் வாழ்வு நிலைபெற இறைவனை வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட யானையின் உருவம் மரத்தை மறைத்தது. அது மரமாகப் பார்க்கும்பொழுது யானை மறைந்த்து. அதுபோல் பரம்பொருளை உலகத்தில் உள்ள ஐம்பூதமும் மறைத்துக் கொண்டுள்ளது. அவை பரம்பொருளாகத் தெரியும் பட்சத்தில் பூதம் மறைந்திருக்கும்.

Tuesday, February 14, 2017

பெரியாழ்வார் திருமொழி - உய்யவுலகு

உயிர்களெல்லாம் பிழைக்கும்படி உலகங்களைப் படைத்து, பிரளய காலத்தில் அவற்றை உண்ட வயிற்றை உடையவனே! பல ஊழிக்காலங்களிலும் ஆலிலையின்மேல் உன்திருவயிற்றிலுள்ள உலகங்கள் அசையாதபடி மெல்ல யோகநித்திரை செய்த பெருமானே! தாமரை போன்ற நீண்ட திருக்கண்களையும் மைபோலக் கரியதான திருமேனியையும் உடையவனே! தலைவனே! திருமகள் தங்கும் உன் திருமார்பு, நீ ஆடும்போது அசையாதபடி காப்பினை உடைத்தாக வேண்டும் என நீ நினைத்துக்கொண்டு எனக்காக ஒருமுறை செங்கீரையாட வேண்டும். மகரக்குழைகள் அணிந்த காதுகள் மிகவும் ஒளிவிட, என் பொருட்டாக ஒருமுறை நீ செங்கீரை ஆடி அருள்க. ஆயர்களின் போர் ஏறே செங்கீரை ஆடுக.
            இரணியன் புதல்வனை மெய்யன் எனக்காட்ட, நரசிம்மமாகத் தோன்றி அவ்வசுரன் உடலைக் கூறிய நகங்களால் கிழித்துக் குருதி குழம்பியெழக் கொன்றாயே! தேவேந்திரன் மிகச் சினந்து மேகங்களை ஏவிக் கல்மழை பெய்யச் செய்த பொழுது, (கோவர்த்தன) மலையைக் குடையாகப் பிடித்துப் பசுக்களைக் காத்தவனே! ஆண்மையாளனே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுக! ஆயர்கள் போரேறே ஆடுக, ஆடுகவே. எங்களுக்குத் தலைவனே! நான் மறையின் பொருளாய் இருப்பவனே! உன் கொப்பூழ் தாமரையிற் பிறந்த நான்முகனுக்குத் தாய் ஆனவனே! பூமி முழுவதுடன் நட்சத்திரம் நிலவும் ஆகாயம் வரை கால்களைப் பரப்பி, அதற்கு மேலும் வளர்ந்த திரிவிக்கிரமனே! குவலயா பீடம் என்னும் யானையையும் ஏழு காளைகளையும் மோதி வென்றவனே! தலைவனே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடி அருள்க! ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
            தேவர்கள் மகிழ, வலிய சகடாசுரன் உருண்டுமாள வஞ்சனைப்பூதனையின் மார்பு நெஞ்சை அமுதமாகக் குடித்தவனே! காட்டிலே வலிய விளாமரத்தின் காய்களை உதிரச் செய்யக் கன்றினைக் கொண்டு அதன் மீது எறிந்த  - கரியநிறமுடைய என்கன்றே! தேனுகன், முரண், நரகன் எனும் அசுரர்களை அழித்த போர்யானையே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுக. ஆயர்கள் போர் ஏறே! ஆடுக, ஆடுகவே! நீண்ட கூந்தலையுடைய அழகிய இடைப்பெண்கள் மத்தாலே கடைந்த தயிரையும் நெய்யையும் அவர்கள் அறியாதபடி அள்ளி விழுங்கினாய். உன்னைக் கொல்லும் நினைப்போடு இணை மருதங்களாய் நின்ற அசுரர்களை உன் தொடைகளினாலும் கைகளினாலும் தள்ளியளித்தாய். உன் முத்துப்பற்களின் புன்முறுவல் தோன்று முன்னேயே அழகு பொருந்திய  உன்முடியானது உன்முகத்தில் தாழ்ந்து நீ ஒருதடவை செங்கீரை ஆடி அருளுக. ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே.
            காயாம் பூ நிறத்தவனே! நீலமேக உருவத்தாய், காட்டில் பெரிய மடுவில் காளிங்கன் தலையிலே நடனம் செய்த அழகனே! என் மகனே! மதமிகுந்த குவலயாபீடம் எனும் யானையின் கொம்புகளைப் பறித்தவனே! மற்போர் வகை தெரிந்து வந்த மல்லர்களை உனக்கு ஆபத்தின்றி அழித்துக் கூத்தாடிய இரண்டு திருவடிகளையுடையவனே! ஆயனே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுவாயாக. ஆயர்கள் போரேறே செங்கீரையாடுவாயாக. ஒரு காலத்தில் வலிமையுடைய இடையர்களின் சொல்தவறாமல்  - கறுத்த கூந்தலையுடைய மயில்போன்ற நப்பின்னையை மணப்பதற்காகக் கொடிய காளைகள் ஏழையும் அடக்கிய வல்லமை உடையவனே! ஒளிமயமான பரமபதத்துக்கே உன்தேரைச் செலுத்தி, கைதப்பிப்போன அந்தணன் பிள்ளைகளை மீட்டுத்தாயுடன் கூட்டிய என் அப்பனே! எனக்காக ஒருமுறை செங்கீரையாடுவாயாக! ஆயர்கள் போரேறே செங்கீரையாடுவாயாக.
            என்றும் நிலைநிற்பதான திருக்குறுங்குடி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருப்பவனே! திருவெள்ளறையில் உறைபவனே! மதில் சூழ்ந்த திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவனே! திருக்கண்ணபுரத்து அமுதே! என்னுடைய துன்பத்தைப் போக்குபவனே! உன்னை இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு தத்தம் இல்லங்களுக்குச் சென்று தங்கள் கருத்துக்குத்தக்கவாறு உன்னோடு உறவாடுகின்ற கன்னியர்கள் மகிழவும், காண்பவர்கள் கண்குளிரவும், கற்றவர்கள் பிள்ளைக் கவிபாடவும் நீ செங்கீரையாடுவாயாக, உன்னை மகனாகப் பெற்ற என் மனம் மகிழும்படி ஏழுலகங்களுக்கும் தலைவனே! நீ செங்கீரையாடுவாயாக.
            நான்கு வேதங்களுக்கும் பொருந்தும் பொருளாயிருப்பவனே! (ஆடி வரும் உன் அசைவிலே) பால், தயிர், நெய் வாசனையும்சந்தனம், செண்பகப்பூ, தாமரை, சிறந்த பச்சைக் கற்பூரம் இவற்றின் மணமும் கலந்து வரவும், உன் பவளவாயினிலே வெள்ளிமுளைத்ததுபோலச் சிலபற்கள் ஒளிவிடவும், உன்னுடைய நீலநிற மார்பில் ஐம்படைகள் நடுவே கனிவாயிலிருந்து வரும் உமிழ்நீர் அமிழ்தமாக இற்று இற்று விழவும் நீ செங்கீரையாடுவாயாக! ஏழுலகங்களுக்கும் நாயகனே! நீ செங்கீரையாடுவாயாக. எங்கள் குடிக்கு அரசே! உன் திருவடிகள் செந்தாமரை போன்றவை. விரல்களோ பூவின் உள்ளிதழ் போன்றவை. அவற்றில் உள்ள திருவாழி மோதிரங்களும், கால்சதங்கைகளும், இடையிலுள்ள பொன் அரைநாணும், பொன்னால் செய்த காம்பை உடைய மாதுளம் பூக்கோவையும், இடையிடையே கலந்து கோத்த பொன்மணிக் கோவையும், திருக்கையிலுள்ள மோதிரங்களும், மணிக்கட்டிலுள்ள சிறுபவள வடமும், திருமார்பில் உள்ள ஐம்படைத்தாலியும், தோள்வளைகளும், காதணிகளும், மகரகுண்டலங்களும், காதின் மேல் அணிந்துள்ள வாளிகளும் நெற்றிச் சுட்டியும் அழகுடன் விளங்கும்படி நீ செங்கீரையாடுவாயாக. ஏழுலகும் உடையவனே, நீ செங்கீரையாடுவாயாக.
            ‘அன்னம், மீன், நரசிம்மன், வாமனன், ஆமை ஆக அவதரித்தவனே! என் இடர் நீக்கிய ஆயர்தலைவனே! நீ செங்கீரை ஆடுஎன்று அன்ன நடையாள் அசோதை விரும்பி வேண்டியதைப் புதுவைப்பட்டர் பிரானாகிய பெரியாழ்வார் இன்னிசை மாலைகளாக அருளினார். இப்பத்தையும் ஓதவல்லவர்கள் உலகில் எண்திசைகளிலும் புகழும் இன்பம் பெறுவார்கள்.


திருவெழுகூற்றிருக்கை – அருணகிரிநாதர்

பிரம்மனிடத்திலிருந்து மானுடப் பிறப்பில் ஒப்பற்ற ஆறு தனிச் சேய்களான வகையில் தோன்றியவன். தாய் தந்தை மரபுகளைப் பெற்று இருமரபினையும் ஒன்றாக்கியதுபோல் ஆறு முகங்களும் ஒரு சேரப் பெற்று சிவன், சக்தி என்ற இருவர் அம்சமாய் அவதரித்தவன். மூப்பு என்பது எப்பொழுதும் இன்றி குமரனாகவே இருந்தருள்பவன். அந்தணர்களுள் ஒப்பற்றவனாய் இருக்கின்றான்.     
            பெருமிதத்தின் காரணமாக பரமதேவன் சிவபெருமானை பார்க்கச் சென்ற காலத்தில் குமரனை வணங்காமல் போகவே அவன் சினந்து அவனது தலைமுடியை ஒரு நொடிப்பொழுதில் களைந்து மொட்டையாக்கியவன். தனது தந்தையாகிய சிவபெருமான், திருமால், பரமன் மூவரும் எழுந்தருளி வந்து குமரனின் திருவடிகளில் வீழ்ந்து பிராத்திக்கவே ஒற்றைச் சிறையினின்றும் விடுவித்து அருளினான்.
            கண்ணிமைக்கும் பொழுதிற்குள்ளே பெரிய சிறகுகளையுடைய மயிலின் மீதேறிக் கடலாற் சூழப்பட்ட நிலவுலகம் அஞ்சும்படி சுற்றி வந்தவன். நான்கு பகுதிப்பட்ட தந்தங்களையும் மூன்றிடங்களிற் பெருகும் மதநீரையும் இரண்டு காதுகளையும் ஒப்பற்ற (ஒரு) தும்பிக்கையையும் உடைய மலை போன்ற ஐராவதத்தினையுடைய (காப்பில் வளர்ந்த) பெண்ணாகிய தெய்வயானையை விரும்பித் திருமணம் செய்து கொண்டவன்.
            ஒரு வகையாகிய யானை வடிவத்திலேயே யானை உருவும் மானிட உருவும் ஆகிய இருவகையான வடிவம் தாங்கிய விநாயகர் தனக்கு முன் பிறந்தவனாக இருக்கும்படி, தொங்குகின்ற வாயையுடைய யானை முகத்தோனும் ஐந்துகரங்களையுடைய கடவுளுமாகிய அறுகம்புல்லைச் சூடிக் கொண்டுள்ள விநாயகனுக்குத் தம்பியாய்  தோன்றியவன்.
            நான்கு வேதங்களும் தெரிய வைக்கின்ற முக்கண்களையுடைய ஒளிவடிவினனாவனும், தீவினைகளைப் போக்கும் மருந்து போலானவனுமாகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற குருநாதனாக  விளங்கியவன். ஒருநாள் தந்தையார் பிரம தீர்த்தத்தில் நீராடச் செய்யச்சென்ற போது உடனழைத்துச் சென்ற அந்த நாளில், தோணிபுரத்து உமையம்மை இருமுலைகளிலும் பெருகிய பாலைப் பொற்கிண்ணத்தில் கொடுக்க அருந்தி, ‘இந்தப்பிள்ளை முத்தமிழிலும் வல்ல திறவோன், நாற்கவி பாடுதலிற் சக்கரவர்த்தி, ஐம்புலன்களுக்கும் தலைவனாகிய மன்மதன், சண்முகனாகிய செவ்வேள்என்று சொல்லப்படும் படியும் மேன்மேல் எழுச்சிதரும் படியான அழகோடு சீகாழியில் தோன்றியவன்.
            கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரால் பாலூட்டப் பெற்று வளர்க்கப் பெற்றவன். இந்திரனுக்காக நான்கு வேதங்களின் அம்சமாய்த் தோன்றியுள்ள மூன்று பிளவுளதாகிக் கவர்த்த சிவந்த கொண்டையை உடையதான ஒப்பற்ற வேலாயுதத்தை கிரௌஞ்சகிரி இருதுண்டாகி விழும்படிச்  செலுத்தியவன். காவிரியாற்றின் வடக்குக்கரையில் அமைந்துள்ள சுவாமிமலையில் நித்தியவாசம் செய்து கொண்டிருக்கும்நம : குமாராயஎன்று ஆறெழுத்து மந்திரத்தை இடைவிடாதுரைக்கின்ற அந்தணர்கள் நினது இரண்டு திருவடிகளையும் துதித்துப் புகழக்கூடிய  தனிப்பெருங்கடவுளாக வீற்றிருந்து அருள்பவன் என்று அருணகிரியார் குமரபெருமானின் புகழைப்பாடுகின்றார்.