எதிர்ப்பார்த்திராத வெள்ளப்பெருக்கம் மனிதனைப் புரட்டிப்போட செய்ததோடு மட்டும் விட்டுவைக்கவில்லை அவனுள்ளே புதைந்து போயிருந்த மனிதநேயத்தையும் புரட்டிபோட வைத்திருக்கின்றது. எங்கே இருந்தார்கள் இவர்கள் எல்லாம் என்று எண்ணும்படியான தன்னார்வலர்களைக் கூட்டிணைத்திருந்தது இந்தப் பேரிடர். சென்னை மக்கள் எல்லாம் சுயநலவாதிகள் என்று எண்ணியிருந்த என் எண்ணம் பொய்த்துப்போனது என்று தொலைக்காட்சியில் தன்னார்வலர் ஒருவர் பேட்டியளிக்கின்றார். பல ஊர்களிலிருந்தும் சாரை சாரையாக நிவாரணப் பொருட்களோடு மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இதையெல்லாம் கடந்து இயற்கை சில மறந்துவிட்ட மனிதநேயத்தை நினைவூட்டுவதாக எனக்குப்பட்டது.
வெள்ளப்பெருக்கு, வீட்டையிழந்த மக்கள், நிவாரணப்பொருட்கள், வாட்சப் வதந்திகள் என்று பலவிதமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலாவி நம்மை மூழ்கடித்துக்கொண்டிருக்க சில புகைப்படங்கள் வேறு ஒன்றைப் பேசிக்கொண்டிருந்தன. மனிதன் மனிதன் மேல் காட்டும் நேயத்தைக் கடந்து அஃறினை உயிர்களின் மீது காட்டிய நேயம் அளப்பரியதாக இருந்தது. இந்தக் காட்சிகள் எனக்கு சாதாரணமாகத் தெரியவில்லை. மனிதனை மீண்டும் இயற்கையிடம் அழைத்துச் செல்வதாக எனக்கு தென்பட்டது. இன்னொரு புளிய மரத்தின் கதையையும், புன்னை மரத்தை நேசிக்கும் தலைவியையும் பார்க்கமுடிந்தது.
தொலைக்காட்சியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழைத் தொடரும் என்ற செய்தியைக் கேட்டுவிட்டு சேனலை மாற்றுகின்றேன் மற்றொரு அலைவரிசையில் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த சலீம் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதில் கவனத்தைச் செலுத்துகின்றேன். சம்மந்தம் இல்லாமல் இங்கே ஏன் பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். திரைப்படத்தில் ஒரு காட்சி கதையின் நாயகன் தனது உடன் பணிபுறியும் மருத்துவ நண்பருடன் தொலைபேசியில் உரையாடுவார், "சாமி அண்ணே நாளைக்கு நான் உயிரோடு இருப்பேனோ தெரியாது. என் வீட்டுல நிறைய பூனைகள் வளர்க்கிறேன். அதுங்கலாம் பசியோட இருக்கும். அதுங்கள நல்லா பாத்துக்குற யார்கிட்டயாது கொண்டுபோய் சேர்த்துருங்க" என்று உரையாடல் போகும். நான் சொல்ல வருவதற்கு கொஞ்சம் நெருக்கமாக இருக்குமே என்றே இதை சொல்லவந்தேன்.
பசுவின் மடியில் பால் உண்ணும் பன்றிக் குட்டி, இடுப்பளவு தண்ணீரில் நாய் ஒன்றை தோளில் சுமக்கும் சிறுவன், தண்ணீரில் தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு செல்லும் நாய், பசித்த நாய்க்கு பிஸ்கட் தரும் ராணுவவீரன் என்று அபரிமிதமான வெள்ளப்பெருக்கினிடையே இது போன்று சிக்கிய புகைப்படங்கள் ஏராளம்! ஏராளம்!
எந்த வெள்ளப்பெருக்கு மனிதனை சாதி, மதம், இனம் கடந்து இணைத்து வைத்ததோ அதே இணைப்பு சக உயிரிகளிடமும் இணைத்துக் காட்டியது. 'காக்கை குருவி எங்கள் சதி' 'நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்' 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'வாடிய பயிரைக் காண்ட போதெல்லாம் வாடினேன்' என்று இவற்றையெல்லாம் மறந்து திரிந்தோம். மீண்டும் அந்த சுழற்சிக்கு நம்மை ஈட்டிச் சென்றுள்ளது இந்த வெள்ளம். இயற்கை நம்மிடம் எந்த பேதம் பார்த்தும் நடந்து கொள்வதில்லை. நாம் தாம் அதனிடம் பேதம் பார்த்து நின்றோம். அதன் வெளிப்பாடே நாம் இந்த நிலையில் நின்று கொண்டிருக்கிறோம்.
மரங்களை நேசிக்காது, தண்ணீரைச் சேமிக்காது உச்சத்தில் நின்றுகொண்டு ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருந்த நம்மை ஒட்டுமொத்தமாக கீழே தள்ளி ஏளனம் செய்துகொண்டிருக்கின்றது இயற்கை. தலைவர்களே! நீங்கள் மக்களைப் பார்த்து கேட்கலாம், ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் நாங்கள் உலகை மாற்றிகட்டுகிறோம் என்று. ஆனால் சந்தர்ப்பமும் கேட்காமல் சதுரங்கம் ஆடுவது இயற்கையாகத்தான் இருக்க முடியும். இந்த பேரிடர் உலகையும் மாற்றியிருக்கின்றது உண்மை முகங்களையும் அடையாளம் காட்டியிருக்கின்றது.
பாரதி சொன்னது போல் 'ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் செய்வோம்' என்று அத்துனையும் செய்தோம். ஆனால் இயற்கை எனும் இன்பத்தை மறந்தழித்தோம். இன்று 'இயற்கை செய்வோம்' என்று பாட இன்னொரு பாரதி வர வேண்டியதில்லை. நாம் தான் அதை கையில் எடுக்க வேண்டும். எரி ஆறு குளங்களை ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை அகற்றினால் மட்டுமே இத்தகைய பேரிடரிலிருந்து நாம் தப்பிப் பிழைக்க முடியும் என்பது சமூக ஆர்வலர் பலரின் குரலாக உள்ளது. கூடியவரையில் அதைச் செய்யும்பட்சத்திலாவது நாம் கொஞ்சம் இயற்கையோடு இணக்கமாகியிருப்போம். வயலும் வயல் சார்ந்த இடத்தை நாம் மாற்றியமைக்காவிட்டால் நிச்சயமாக மருதம் கூட கடலும் கடல் சார்ந்த இடமாகத்தான் காட்சியளிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
No comments:
Post a Comment