1)
ஆண்
குரங்குகள் பல்வகைப் பழங்களைப் பறித்துக் கொடுத்துப் பெண் குரங்குகளோடு
தழுவும்; அக் குரங்குகளால் சிதறியெறியப்படுகின்ற
பழங்களை வானுலகத்தில் வாழும் தேவர்கள் இரந்து இரந்துவேண்டிக் கேட்பார்கள்,
வனவேடர்கள் தம்
கண்களால் ஏறெடுத்துப்)பார்த்து உற்று
நோக்கித் தேவர்களை அழைப்பார்கள்; வானின் வழியாகச் செல்கின்ற சித்தர்கள்
கீழிறங்கி வந்து காயசித்தி மருந்துகளாகிய வன மூலிகைகளை
வளர்ப்பார்கள்; தேன் கலந்த மலையருவியினது
அலைகள் மேலெழுந்து வானத்தினின்றும்
வழிந்து ஓடும்; அதனால் செந்நிற ஞாயிற்றின்
தேரிற்பூட்டிச் செல்லும் குதிரைக்
கால்களும் தேர்ச்சக்கரமும் வழுக்கி விழும்; வளைந்துள்ள இளம் பிறையைச்
சூடியிருக்கின்ற சடைமுடியையுடைய அழகரான திருக்குற்றால நாதர்
எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றாலமாகிய இச் சிறப்புவாய்ந்த
திரிகூடமலையே எங்களுக்குரிமையாக நாங்கள்
வாழ்கின்ற மலையாகும்;
2)
ஒலிக்கின்ற அலைகளையுடைய நீர் வீழ்ச்சி,
செல்லும் வேகத்தில் கழங்காடுகின்ற
தென்னும்படி முத்துக்களை ஒதுக்கிச்
செல்லும்;
அவ்வருவி, மக்கள் வாழ்கின்ற
வீட்டின் முற்றங்களிலெல்லாம் பரவிச்
சென்று சிறுமிகளின் மணல்வீடுகளை அழித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும்;
நாங்கள் மலைக்கிழங்குகளைத் தோண்டியும்,
தேன் இறால்களைப் பிய்த்து எடுத்தும்,
மலையின் செழிப்பைப் பாடிக்கொண்டே
கூத்தாடுவோம்;
பூண்கட்டிய யானைக்கொம்புகளை ஒடித்து
உலக்கையாகக் கொண்டு வறுத்த தினைத் தானியத்தை இடிப்போம். இளமை பொருந்திய குரங்குகள்
இனிமையுள்ள மாம் பழங்களையே பந்தாகக் கொண்டு அடித்து விளையாடும்;
தேன் பெருகி ஓடுகின்ற
செண்பகப் பூவின் மணம்,
தேவருலகினிடத்தே போய்ப் பரவும்;
அருட்கொடை
வழங்குகின்ற தேவாதி தேவராகிய குறும்பலா
மரத்தினடியில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதருக்குரியதான எல்லா
வளப்பமும் பெருகியிருக்கின்ற திருக்குற்றாலமலையே
எங்களுக்குரியதாக நாங்கள் வாழுகின்ற
மலையாகும்;
3)
ஆடுகின்ற
நாகப் பாம்புகள் கக்கிய எண்ணிறந்த மணிகள் எங்கும் ஒளிகொடுக்கும்;
யானைகளானவை திங்களைத் தாம் உண்ணும் கவள
உருண்டையென எண்ணி அது செல்கின்ற வான்வழியில் போகவொட்டாமல் தடைசெய்யும்,
மலைக் குறவர்கள் தினைப்பயிரை
விதைப்பதற்காக அழிக்கப் படுகின்ற
காடுகளிலெல்லாம் உள்ள பலவகை மரங்களும் அகில் குங்குமம் சந்தனமரங்களும் கண்டோர்
வியக்கும்படி தம் மணங்களைப் பரப்பும்; காடுகளில் எங்கும் ஓடிச்சென்று
வரையாடுகள் துள்ளிக் கீழே பாயும்; காகமும் பறவாத உயர்ந்த மலையில் மேகக்
கூட்டங்கள் உச்சியில் சாய்ந்தோடும்; நீண்ட குறும்பலாவடியில்
எழுந்தருளியிருக்கின்றவரும் கைலை மலையில் வாழ்பவருமாகிய
திருக்குற்றாலநாதரின்
நிலைபெற்றிருக்கின்ற திருக்குற்றாலமலையே எங்களுக்குரியதாக
நாங்கள் வாழ்கின்ற மலையாகும்;
4)
திருக்கைலைமலை
யென்று கூறப்படுகின்ற வடக்குப் பக்க மலைக்குத் தென்பக்கத்தில்
இருக்கின்ற மலையாகும்;
இது பெரிய பொன்மலை என்னும் மேருமலை
போன்ற தென்னும்படி உயர்ந்த மலை அம்மே! சிவசைலம் என்னும் தெற்கு பக்கமுள்ள மலைக்கு
வடக்குப் பக்கமாக இருக்கின்ற மலை இஃது அம்மே! இம்மலை மற்ற எல்லா
மலைகளின் சிறப்பெல்லாம் தனக்குள் நிறையக்கொண்டிருக்கும் வளமுடையது
அம்மே! அது வைரமணியுடன் பலவகை மணிகளையும் விளைத்துத் தருவது அம்மே!
வான்வழியாகச் செல்லும் ஞாயிறு குகைகளையே வழியாகக்கொண்டு நுழைந்து செல்வதற்கு
இடனாகஇருப்பதும் அந்த மலைதான் அம்மே! அறிதுயில் புரிகின்ற திருமாலான வருங்கூடத்
துயில் விட்டெழுந்து எல்லா உலகங்களிலும் போய்த் தேடுகின்ற
மேன்மையாளராகிய திரிகூடநாதப் பெருமானுக்குரிய திரிகூட மலைதான்
எங்களுக்குரியதாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும் அம்மே!
5)
கொல்லி
மலையானது எனக்குப் பின் பிறந்த செல்லி என்னும் பெயருடையாளுக்குரிய
மலையாகும்;
அவளின் கணவனுக்குக் குடிக்காணியாட்சியாக
இருப்பது பழனிமலை ஆகும் அம்மே! ஞாயிறு மேலே செல்கின்ற விந்தை என்னும் மலையே என்
தந்தைக்குரிய மலையாகும் அம்மே! இமயமலை என்னுடைய தமையனுக்குரிய மலையாகும்
அம்மே! சொல்லுதற்கரிய சுவாமி மலை என்னும் மலையே என் மாமியாளுக்குரிய மலையாகும்
அம்மே! என் தோழிக்குரிய மலையோ நாஞ்சில் நாட்டிலுள்ள வேள்வி யென்னும்
மலையாகும் அம்மே! மேகங்கள் குமுறலாகிய பறையை முழக்க,
அதற்கேற்ப மயிலினங்கள்
நடனஞ்செய்கின்ற திரிகூட மென்னும்
திருக்குற்றாலமலையே எங்களுக்குச் செல்வப்பொருளாக
இருக்கின்ற நாங்கள் வாழும் மலையம்மே!
6)
எங்கள்
குலந்தவிர வேறொரு சாதியில் நாங்கள் பெண்கள் கொடுக்கமாட்டோம்;
வேறொரு குலத்தில் பெண்களை மணஞ்செய்யவும்
மாட்டோம்;
குறவர் சாதியினராகிய
நாங்கள் ஒருவரை நட்புக் கொண்டால்
இடையில் அந்நட்பை விட்டுவிடமாட்டோம்; நாங்கள் அச்சங்கொள்ளும்படி தினைப்
புனத்தினிடத்தே வருகின்ற யானை முதலிய விலங்குகளைத் துரத்தி வேங்கை மரமாக
நின்று எங்களுக்கு நிழல் தந்த நன்மைக்காக எண்ணிப் பார்த்து அருளாளராகிய
இலஞ்சியில் எழுந்தருளியிருக்கின்ற வேலினை யுடைய முருகப் பெருமானுக்கு வள்ளி
யென்னும் ஒரு பெண்ணை முன்பு கொடுக்கலானோம்; அதற்காக எங்களுக்குரிமையான வேறு மலைகள்
எல்லாவற்றையும் மகட்கொடைப்பொருளாக வழங்கலானோம்;
ஞாயிறு திங்கள் சுற்றிவருகின்ற
மேருமலையைத் துருவன் என்பவனுக்குக் கொடுத்துதவினோம்;
சிறந்தவராகிய திருக்குற்றால
நாதருக்குரிய இத்தகைய திரிகூட மலையே எங்களுக்குரியதாக நாங்கள் வாழ்கின்ற மலையாகும்
அம்மே!
vera level thank you
ReplyDeletevera level thank you
ReplyDeletesame
DeleteSuper fantastic
ReplyDeleteநன்றி
ReplyDelete