Tuesday, August 16, 2016

எது சுதந்திரம்? – ஹேனா ரேவதி

எது சுதந்திரம்?
                ‘இல்லைஎன்பதை ஏற்றுக்கொள்ளாமல்
                ‘செய்யாதேஎன்பதையே செவியில் ஏற்றாமல்
                ‘வேண்டாம்என்பதை வெறுத்துத் தள்ளி
                வேண்டியபடி வாழ்வதா?
எது சுதந்திரம்?
                ஏன் என்று கேட்காமல்
                எதற்கு எனத் தடுக்காமல்
                மனம் போன போக்கில்
                மகிழ விடுவதா?
எது சுதந்திரம்?
                சட்டங்களை அசட்டை செய்து
                பட்டங்களைப் பறக்க விட்டு
                வரையறை ஏதுமின்றி
                வாழ்ந்து முடிப்பதா?
எது சுதந்திரம்?
                நினைத்ததைச் செய்து
                நிந்தையைச் சுமந்து
                விதைத்ததை அறுத்து
                வீணாய்ப் போவதா?
எது சுதந்திரம்?
                அடுத்தவனையும் அனுசரித்து
                அவ்வப்போது அரவணைத்து
                ஆக்கத்தின் பாதையிலே
                அனைவரும் உயர்வதா?
எது சுதந்திரம்?
                விதிகளைப் பின்பற்றி
                வீதிகளில் நலம் விரும்பி
                விடாது உழைத்து
                விண்ணைத் தொடுவதா?
எது சுதந்திரம்?
                சொல், செயல், சிந்தனையில்
                சுத்தத்தைக் கடைபிடித்து
                சுத்தமான இந்தியாவில்
                சுகமாய் வாழ்வதா?

எது சுதந்திரம்?

-          ஹேனா ரேவதி
துறைத்தலைவர், கணிதத்துறை
எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி


3 comments: